ஒன்பது வயது மகனை அடித்த தந்தைக்குச் சிறைத் தண்டனை

ஒன்பது வயது மகனை அடித்த தந்தைக்குச் சிறைத் தண்டனை

2 mins read
65a1168b-59cd-4044-be21-ea71cba95d68
தடுக்க வந்த மனைவியையும் பிரம்பால் தாக்கினார் தந்தை. - கோப்புப் படம்: தமிழ் முரசு

ஒன்பது வயது மகனை ஒழுங்குபடுத்துவதாக நினைத்து குடையாலும் பிரம்பாலும் மாறி மாறி அடித்த தந்தைக்கு திங்கட்கிழமை ( ஜனவரி 29) மூன்று வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஐம்பது வெள்ளியை சிறுவன் திருடியதாக அவரது மனைவி சந்தேகப்பட்டதைத் தொடர்ந்து அவர் சீறியெழுந்துள்ளார். தடுக்க வந்த மனைவியையும் அவர் பிரம்பால் தாக்கியிருக்கிறார்.

2023 நவம்பர் மாதம் தனது மகனை அடித்த குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மனைவியிடமும் இதேபோன்று நடந்துகொண்ட குற்றச்செயலும் அவருக்கு தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிறுவர் மற்றும் இளவயதினர் சட்டத்தின்படி பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள் என்பதால் சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை.

2022 நவம்பர் 30ஆம் தேதி சிறுவனுடன் தாயார் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்றார். விழா முடிந்து திரும்பும்போது பிறந்த நாள் கொண்டாடிய பையன் தனக்கு 50 வெள்ளி கொடுத்ததாக சிறுவன் தமது தாயாரிடம் தெரிவித்தார்.

தமது மகன் பொய் சொல்வதாக சந்தேகித்த தாயார் பணத்தை திருப்பிக் கொடும்படி கூறினார். சிறுவன் அதற்கு இணங்கினான்.

இது குறித்து தனது கணவரிடம் சிறுவனின் தாயார் தெரிவித்தார்.

உடனே சிறுவனை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கூறிய தந்தை, சிறுவனின் தொடை, கைகளில் குடையால் அடித்தார். மகன் கதறி அழுதபோது மனைவி சொல்லியும் அவர் நிறுத்தவில்லை.

சிறுவனை அவர் வீட்டைவிட்டு வெளியேற்றினார். ஆனால் தாயார் மகனை மறுபடியும் வீட்டுக்கு அழைத்து வந்ததைப் பார்த்து பெரிய குடையால் அவர் சிறுவனைத் தாக்கினார்.

சத்தம் கேட்டு ஒருவர் தகவல் கொடுத்ததால் அங்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

தாயார் சிறுவனை சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு சிறுவனின் உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் அடையாளங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“சிறுவனை பிரம்பாலும் அடித்தார். தடுக்க வந்த மனைவியையும் பிரம்பால் அவர் தாக்கினார்,” என்று நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜோர்டி கே தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்