2023ல் பணவீக்கம் குறைந்தது

2023ல் பணவீக்கம் குறைந்தது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Jan 2024 - 11:20 am

2 mins read

கடந்த 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பணவீக்கம் உச்சம் தொட்டது. அது கடந்த ஆண்டு குறைந்ததையடுத்து வாழ்க்கைச் செலவினம் தொடர்பாக சிங்கப்பூர் குடும்பங்களுக்கு ஏற்பட்டிருந்த நெருக்குதல் தளர்ந்தது.

அனைத்து வருமானப் பிரிவுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த வருமான குடும்பங்களுக்குப் பணவீக்கம் ஆகச் சிறிய அளவில் ஏற்றம் கண்டது.

வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் வசித்துக்கொண்டே வீட்டின் அறைகளை வாடகைக்கு விட்டு பெறும் வாடகையைச் சேர்க்காமல், வருமானப் பிரிவுகளில் ஆகக் கடைசியில் இருக்கும் 20 விழுக்காட்டினருக்கான பயனீட்டாளர் விலைக் குறியீடு கடந்த ஆண்டு 4 விழுக்காடு உயர்ந்தது. 2022ல் அது 5 விழுக்காடு உயர்ந்தது.

அதே போன்று நடுத்தர வருமானப் பிரிவினருக்கும் உயர் வருமானப் பிரிவினருக்கும் கடந்த ஆண்டு பணவீக்கம் தளர்ந்ததாக ஜனவரி 23ஆம் தேதியன்று புள்ளிவிவரத் துறை கூறியது.

வருமானப் பிரிவுகளின் நடுப்பகுதியில் உள்ள 60 விழுக்காட்டினருக்கு வாடகைகளைச் சேர்க்காமல் பயனீட்டாளர் விலைக் குறியீடு கடந்த ஆண்டு 4.7 விழுக்காடு ஏற்றம் கண்டது.

ஆக அதிக வருமானம் ஈட்டும் 20 விழுக்காட்டினரின் பயனீட்டாளர் விலைக் குறியீடு 5.2 விழுக்காடு அதிகரித்தது.

சொந்த வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு வாடகைச் செலவினம் இல்லை.

எனவே, வாடகை சேர்க்கப்படாத நிலையில் சராசரி குடும்பங்களுக்கான பயனீட்டாளர் விலைக் குறியீட்டைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

வீடு, போக்குவரத்து, உணவு, தண்ணீர், மின்சாரத்துக்கான செலவு அதிகரிப்பு ஒட்டுமொத்த அளவில் கடந்த ஆண்டு பணவீக்கத்துக்கு முக்கிய காரணங்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

உணவு, வீடுகள், தண்ணீர் மற்றும் மின்சாரம், விடுமுறைப் பயணங்கள் போன்றவற்றுக்கு பயனீட்டாளர்கள் தொடர்ந்து செலவழித்தாக டிபிஎஸ் வங்கி கூறியது.

பயனீட்டாளர்களுக்கிடையே பயணச் செலவுகள் அதிகரித்திருப்பதாக ஓசிபிசி வங்கியும் யுஓபி வங்கியும் தெரிவித்தன.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் யுஓபி கடன் அட்டைகளைப் பயன்படுத்தி $1 பில்லியனுக்கு அதிகமான விமானப் பயணச்சீட்டுகள் வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடன் அட்டையைப் பயன்படுத்தி அத்தியாவசியமற்ற பொருள்களை வாங்கும் போக்கு வாடிக்கையாளர்களிடையே அதிகரித்திருப்பதாக ஓசிபிசி கூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்