தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனைவி பகிர்வு வழக்கு: ஆடவருக்கு 13 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்

2 mins read
b12c5b8d-ba06-4201-b238-cf9a9f6d83f2
தண்டனை விதிக்கப்பட்ட 45 வயது ஆடவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இணையம்

மனைவிகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்குடன் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த ஏழு ஆடவர்கள் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடையவர்களில் ஆறு பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏழாவது ஆடவருக்கு ஜனவரி 30ஆம் தேதியன்று 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

மயக்கமுற்ற தமது மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்ய 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘ஓ’ என்று குறிப்பிடப்படும் அந்த 45 வயது நிதி நிர்வாகியை ‘ஜே’ என்று குறிப்பிடப்படும் ஆடவர் அழைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அன்று ‘ஜே’யும் அவரது மனைவியும் தங்கள் திருமணத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் பிரதான குற்றவாளியான ‘ஜே’, 2010ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தமது மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கியதும் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய ஐந்து ஆடவர்களை அழைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

‘ஓ’வுக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

‘ஜே’ தீட்டிய சதித்திட்டத்தில் சிக்கிய துரதிர்ஷ்டசாலி என்று அவர் தம்மை வர்ணித்தார்.

இதை நீதிபதி மேவிஸ் சியோன் ஏற்க மறுத்தார்.

குற்றம் புரிந்த பிறகு, அதை எண்ணி ‘ஓ’ வருத்தப்படவில்லை என்றும் அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததும் ‘ஜே’யுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களில் அவர் ஈடுபட்டதிலிருந்து தெரிவதாகவும் நீதிபதி கூறினார்.

அடித்தள அமைப்பு தொண்டூழியராகவும் உணவு அறநிறுவனத் தொண்டூழியராகவும் ‘ஓ’ சேவையாற்றியதை அவர் கருத்தில் கொள்ள மறுத்தார்.

தமது கட்சிக்காரர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ‘ஓ’வின் வழக்கறிஞர் திரு சுவா எங் ஹுயி கூறினார்.

$120,000 பிணையில் ‘ஓ’ விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் ‘ஜே’க்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்