முதியவர் மீது மோதிய சிறப்புத் தேவை உள்ள ஆடவர்; காயங்கள் காரணமாக மாண்ட முதியவர்

முதியவர் மீது மோதிய சிறப்புத் தேவை உள்ள ஆடவர்; காயங்கள் காரணமாக மாண்ட முதியவர்

2 mins read
889cd393-7ae9-4abe-9d0d-cc39d464c38a
வேண்டுமென்றே காயம் விளைவித்தல், மானபங்கம், முறையற்ற செயலில் ஈடுபட்டது போன்ற குற்றங்களை 37 வயது லூய் காய் யி புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

சிறப்புத் தேவை உள்ளவரான 37 வயது லூய், தனிநபர் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டு முதியவர் ஒருவருக்குக் கடுமையான காயங்கள் விளைவித்து அவர் மரணத்துக்கு காரணமாக இருந்ததாக நீதிமன்றம் ஜனவரி 30ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது.

லூய்க்கு இருமுனைப் பிறழ்வு எனப்படும் ‘பைபோலார்’ குறைபாடும் ‘ஆட்டிசம்’ எனப்படும் தொடர்புத்திறன் குறைபாடும் உள்ளது  என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, அவர் அறிவுத்திறன் குன்றியவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதியன்று புளோக் 101 தெம்பனிஸ் அவென்யூ 2க்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்தில் ஏற லூய் அதை நோக்கி வேகமாக ஓடினார்.

அப்போது அந்த நடைபாதையில் இருந்த முதியவர் மீது அவர் மோதினார்.

லூய் மோதிய வேகத்தில் அந்த முதியவர் தூக்கி எறியப்பட்டார். அவரது தலை உலோகத்தால் செய்யப்பட்ட தடுப்பு ஒன்றின் மீது மோதியது. அதன் பிறகு அவர் தரையில் விழுந்தார்.

பாதிக்கப்பட்ட அந்த முதியவருக்கு உதவாமல், லூய் பேருந்தில் ஏறிச் சென்றார்.

அந்த முதியவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசடைந்து கோமா நிலைக்குச் சென்றார்.

செப்டம்பர் 6ஆம் தேதியன்று அவர் மாண்டார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தெம்பனிஸ் வட்டாரத்தில் 67 வயது மாதை லூய் தள்ளிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. கீழே விழுந்த அந்த மாது, சிறிது நேரம் சுயநினைவு இழந்ததாக அறியப்படுகிறது. அவருக்கு உதவி செய்யாமல் லூய் அந்த இடத்திலிருந்து கிளம்பிச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாதுக்கு தலையில் காயங்களுடன் கீழ் முதுகில் எலும்பு முறிவும் முழங்கைகளில் காயங்களும் ஏற்பட்டன.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள உணவுக் கடையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த 27 வயது பெண்ணை லூய் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

சில நாள்கள் கழித்து, பூட்டப்படாத வீட்டிற்குள் லூய் புகுந்து சிறுநீர் கழித்தார். வீட்டின் உரிமையாளர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்ததை அடுத்து, லூய் அங்கிருந்து தப்பி ஓடினார்.

குறிப்புச் சொற்கள்