2023இல் 36 வேலையிட மரணங்கள்; 2022ஆம் ஆண்டைவிட 22% குறைவு

2 mins read
f147d026-c6ec-4a78-abc1-44e3b99b5e02
2023ஆம் ஆண்டில் வேலையிட மரணம் 100,000 ஊழியர்களுக்கு 0.99 என்ற விகிதத்தில் உள்ளதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது விளக்கினார். - படம்: சாவ்பாவ்

கடந்த 2023ஆம் ஆண்டில் 36 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இது 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட 46 வேலையிட மரணங்களைவிட 21.7% குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புநோக்க, 2021ஆம் ஆண்டு 37 வேலையிட மரணங்களும் 2020ஆம் ஆண்டில் 30 வேலையிட மரணங்களும் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய 2016ஆம் ஆண்டில் ஆக அதிகமாக 66 ஊழியர்கள் வேலையிடத்தில் இறந்துள்ளனர்.

2022ஆம் ஆண்டில் வேலையிட மரணங்கள் அதிகமாக இருந்ததை அடுத்து பாதுகாப்பு விதிமீறல்களுக்கு அதிகரித்த தண்டனைகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக 2023ஆம் ஆண்டு வேலையிட மரணங்கள் குறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 2023ஆம் ஆண்டு மே மாதத்துக்கு இடையில் உயர் பாதுகாப்பு காலமாக வரையறுக்கப்பட்டு அதற்கென பல அமைப்புகளைக் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டது.

இந்தப் பணிக்குழு உயர் அபாயங்கள் உள்ள துறைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த பணிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இவ்வாண்டு தலைமை நிர்வாகிகளுக்கு கட்டாய வேலையிடப் பாதுகாப்புப் பயிற்சி திட்டம் உள்பட வேறு பல திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மனிதவள அமைச்சு 2023ஆம் ஆண்டின் வேலையிட மரணங்கள் தொடர்பான புள்ளிவிவரத்தை புதன்கிழமை (ஜனவரி 31) அன்று வெளியிட்டது.

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார புள்ளிவிவரத் தரவுகள் இனிவரும் மாதங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 2023ஆம் ஆண்டில் வேலையிட மரணம் 100,000 ஊழியர்களுக்கு 0.99 என்ற விகிதத்தில் உள்ளதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது புதன்கிழமை (ஜனவரி 31) அன்று விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்