தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம்: சுற்றுப்பயணத்துறை மீட்சி இவ்வாண்டு தொடரும்

2 mins read
de39f408-d5d2-4e82-9019-bbb54e2c810f
இவ்வாண்டு சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 15 மில்லியனிலிருந்து 16 மில்லியன் வரை பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது சிங்கப்பூரின் சுற்றுப்பயணத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

நெருக்கடிநிலைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு சுற்றுப்பயணத்துறை மிக வலுவாக மீண்டு வந்தது.

அதன் மீட்சி இவ்வாண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் பிப்ரவரி 1ஆம் தேதியன்று தெரிவித்தது.

சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 15 மில்லியனிலிருந்து 16 மில்லியன் வரை பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இவ்வாண்டு சிங்கப்பூருக்கு $26 பில்லியனிலிருந்து $27.5 பில்லியன் வரை சுற்றுலா சார்ந்த வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு 13.6 மில்லியன் சுற்றுப்பயணிகள் வந்தனர். அதன்மூலம் சிங்கப்பூருக்கு $24.5 பில்லியனிலிருந்து $26 பில்லியன் வரை சுற்றுலா சார்ந்த வருமானம் கிடைத்தது.

கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு 2019ஆம் ஆண்டில் சுற்றுப்பயணத்துறை மூலம் சிங்கப்பூருக்கு $27.7 பில்லியன் சுற்றுலா சார்ந்த வருமானம் கிடைத்தது.

சுற்றுப்பயணத்துறை மூலம் சிங்கப்பூருக்கு இவ்வாண்டு கிடைக்கும் சுற்றுலா சார்ந்த வருமானம் அந்தத் தொகையை நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 2019ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்த 19.1 மில்லியன் சுற்றுப்பயணிகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணிகளில் இந்தோனீசியா, சீனா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம்.

இதற்கிடையே, கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் சாங்கி விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்து 86 விழுக்காடு மீண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏறத்தாழ 58.9 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையம் வழியாகப் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளே அதிகம்.

குறிப்புச் சொற்கள்