வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் தொடர்பான செயல்; ஆடவருக்கு 10 மாதச் சிறை

வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் தொடர்பான செயல்; ஆடவருக்கு 10 மாதச் சிறை

2 mins read
8d8fd487-8e8a-4fc7-a999-71d56fe7aab8
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுப்பிரமணியம் தபுரான் ரங்கசாமி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் தொடர்பான செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி ஒருவருக்கு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றச் செயல் நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 15 வயது.

தற்போது அந்தப் பெண்ணுக்கு 17 வயது. அவரது அடையாளத்தைக் காக்க அவரது பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

16 வயதுக்கும் குறைவான பெண்ணுடன் பாலியல் தொடர்பான செயலில் ஈடுபட்ட குற்றத்தை 50 வயது சுப்பிரமணியம் தபுரான் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பளிக்கப்பட்டபோது அவருக்கு எதிராக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தற்காப்பு அமைச்சு கூறியது.

அவர் தொடர்பான வழக்கு விசாரணை நிறைவுபெற்றதும் அவருக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தற்காப்பு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

அவர் ஆயுதப் படையிலிருந்து பணிநீக்கம் செய்யப்படக்கூடும் என்று நம்பப்படுகிறது.

2021ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று அந்தக் குற்றச்செயல் நிகழ்ந்தது.

சுப்பிரமணியமும் அப்போது உயர்நிலை மூன்றாம் வகுப்பில் பயின்றுகொண்டிருந்த அப்பெண்ணும் அடுக்குமாடி வாகனநிறுத்திமிடத்தில் சந்தித்தனர்.

அவர்கள் இருவரும் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்.

அன்று காலை 11 மணிக்குப் பள்ளி ஆலோசகரை அந்தப் பெண் சந்திக்க இருந்தார்.

தனிமையில் இருக்க அவர் வாகன நிறுத்துமிடத்துக்குச் சென்றதாக அறியப்படுகிறது.

சுப்பிரமணியம் தமது மோட்டார் சைக்கிளில் வேலைக்குப் புறப்பட இருந்தார்.

அப்போது அந்தப் பெண் தடுக்கி விழுந்து கதவு மீது மோதினார்.

சுப்பிரமணியம் அவருக்கு உதவினார்.

உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பெண் தமது வீட்டிற்குச் சென்று அங்கிருந்து குளிர்பானம் ஒன்றை சுப்பிரமணியத்துக்குக் கொண்டு சென்றார்.

வாகன நிறுத்துமிடத்தின் நான்காவது மாடிப் படிக்கட்டில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து இருவரும் நெருக்கமாகினர். அப்பெண் சுப்பிரமணியத்துடன் பாலியல் தொடர்பான செயலில் ஈடுபட்டார்.

சுப்பிரமணியம் அப்பெண்ணுடன் பாலியல் உறவு கொள்ள முயன்றார். ஆனால் அது ஈடேறவில்லை.

அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

கிளம்பிச் செல்வதற்கு முன்பு இருவரும் தங்கள் தொடர்பு எண்களைப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.

வாட்ஸ்அப் மூலம் அவர்கள் இருவரும் தொடர்பில் இருந்தனர்.

ஆனால் அதன்மூலம் பாலியல் ரீதியான தகவல்கள் அனுப்பப்படவில்லை.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதியன்று சுப்பிரமணியத்துக்கு எதிராக அப்பெண் காவல்துறையில் புகார் செய்தார்.

அவர் தம்முடன் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

அப்பெண்ணின் வயது தெரிந்துதான் சுப்பிரமணியம் அவருடன் பாலியல் தொடர்பான செயலில் ஈடுபட்டதாக துணை அரசாங்க வழக்கறிஞர் சுனில் நாயர் தெரிவித்தார்.

இருப்பினும், தம்முடன் நெருக்கமாக இருக்கும்படி அப்பெண்ணை சுப்பிரமணியம் பலவந்தப்படுத்தவில்லை என்றார் அவர்.

16 வயதுக்கும் குறைவான பெண்ணுடன் பாலியல் உறவு கொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்