மியன்மாரில் அவசரநிலை நீட்டிப்பு

மியன்மாரில் அவசரநிலை நீட்டிப்பு

1 mins read
3b44495b-41f8-4066-98f6-0aba1b62f3c1
மியன்மார் ஆயுதப் படையின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

யங்கூன்: மியன்மாரின் ராணுவ அரசாங்கம், அவசர நிலையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆங் சான் சூச்சி தலைமையில் நடந்த ஜனநாயக அரசாங்கத்தைக் கவிழ்த்து ராணுவம் அரியணை ஏறியது.

அப்போது முதல் நாட்டில் ஜனநாயக ஆதரவாளர்களின் கிளர்ச்சி, சண்டை மற்றும் போராட்டங்களை ஒடுக்குவதில் ராணுவம் திணறி வருகிறது.

இந்த நிலையில் அவசரநிலையை நீட்டிப்பது அவசியமாகிறது என்று ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் கூறினார்.

நாட்டில் நிலைத்தன்மையையும் அமைதியையும் நிலைநாட்ட அவசரநிலை முக்கியம் என்றும் ராணுவம் நடத்தும் மியாவாடி ஊடகம் டெலிகிராமில் குறிப்பிட்டது.

1962ல் பிரிட்டிஷ் காலனியாக இருந்த மியன்மாரின் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ராணுவத் தளபதிகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.

ராணுவத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்குப் பிறகு இளையர்கள் தலைமையிலான ஜனநாயக ஆதரவாளர்களின் எழுச்சி ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கமாக மாறியது.

நிழல் அரசாங்கம் மற்றும் சிறுபான்மை இனப் படைகளுடன் இணைந்துள்ள போராளிகளை ஒடுக்க ராணுவ ஆட்சிக் குழு கனரக பீரங்கிகளையும் போர் விமானங்களையும் அனுப்பி வைத்தது.

ஆனால் அக்டோபரில் ஜனநாயக ஆதரவாளர்கள் தொடுத்த ஒருங்கிணைந்தத் தாக்குதலால் ராணுவம் அதிர்ச்சி அடைந்தது. அதன் நம்பகத்திற்கும் இழுக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு ஆண்டைக் குறிக்கும் வகையில் அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மியன்மாரில் ஜனநாயக மாற்றம் ஏற்பட்டு மக்கள் ஆட்சி ஏற்பட வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியதாக ஐநா பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்