தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ள சிகரெட் வர்த்தகத்தில் ஈடுபட்ட எழுவர் கைது

2 mins read
52bd1577-3fd1-462c-a54f-c4b95b14c5b1
சிங்கப்பூர் சுங்கத்துறை, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81ல் நடத்திய தேடுதல் வேட்டையில் லாரி ஒன்றில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. - படம்: சிங்கப்பூர் சுங்கத் துறை

சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய வேட்டையில் இறக்குமதி தீர்வை செலுத்தப்படாத 83 பெட்டிகளில் இருந்த சிகரெட்டுகள் பிடிபட்டன. இக்குற்றத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

சமூக குறுஞ்செய்தி ஊடகம் ஒன்றில் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81ல் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றை சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் கண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என சுங்கத்துறை வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 2ஆம் தேதி) அன்று தெரிவித்தது.

அத்தேடுதல் வேட்டையில் 68 கள்ளச் சிகரெட் பெட்டிகளையும் $3,290 பணத்தையும் ஒரு லாரியின் சரக்கு பெட்டிகளில் இருந்து பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் தீர்வைச் செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பனை செய்ததின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் என நம்பப்படுகிறது.

அந்த லாரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர் சீனவைச் சேர்ந்தவர்.

தனது நிறுவனத்தின் வாகனத்தைப் பயன்படுத்தி தீர்வைச் செலுத்தப்படாத சிகரெட்டுகளை விநியோகிப்பதற்காக ‘விசாட்’ இணையதளம் மூலம் அவர் பணியமர்த்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

இரண்டு வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் ஆறு பேரைச் சுங்கத்துறை கைது செய்தது. அவர்களிடமிருந்து 16 கள்ளச் சிகரெட் பெட்டிகள், 16 கள்ள சிகரெட் பொட்டலங்கள், 48 கள்ளச் சிகரெட்டுகள், ஆறு தீர்வைச் செலுத்தப்படாத மது போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளத்தனமாக சிகரெட்டுகளைக் கொண்டு வந்ததன் மூலம் இவ்விரு வழக்குகளிலும் ஏமாற்றப்பட்ட பொருள் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மதிப்பு $11,361.

குறிப்புச் சொற்கள்