‘சில குற்றச்செயல்களுக்கு கருணை கூடாது’

2 mins read
8f663c1f-15d8-47b6-8fbc-5c2634836603
சிங்கப்பூரில் உள்ள இந்திய மாதர் சங்கத்தில் உரையாற்றும் டாக்டர் கிரண் பேடி. - படம்: தப்லா

போதைப் பொருள் கடத்தலுக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனை உண்டு.

இதை உலக அளவில் ஆம்நெஸ்டி இன்டர்நேஷனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு, ரீப்பிரிவ் மனித உரிமைகள் அமைப்பு, பெரும் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்து வருவது நினைவுகூரத்தக்கது.

சிங்கப்பூரின் இந்தக் கடும் கொள்கை கீழ்மட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்களையும் ஒதுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் மறைமுகமாக பாதிக்கிறது என்று இவர்கள் சொல்கின்றனர். அத்துடன், பெரும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இந்தக் கொள்கைக்கு பெரும் ஆதரவு தெரிவிக்கும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் இந்திய காவல் துறையின் முதல் பெண் அதிகாரியும் டெல்லி சிறைத் துறையின் தலைமைச் சிறை அதிகாரியாக 1993லிருந்து 1995ஆம் ஆண்டுவரை பணிபுரிந்து டெல்லியின் திகார் சிறையில் பல கடுமையான சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தவருமான டாக்டர் கிரண் பேடி.

“போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பல மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றனர்.

அவர்கள் விநியோகிக்கும் போதைப் பொருள் ஒருவரை மட்டுமே பாதிப்பதில்லை, மாறாக, குடும்பங்கள், சமுதாயம் என அனைவரும் பாதிப்படைகின்றனர்.

“ஆகையால், அவர்களுக்கு அந்த தண்டனை சரியானதுதான் என்று நான் நினைக்கிறேன்,” என்று தப்லா பத்திரிகைக்கு செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில் 74 வயது டாக்டர் கிரண் பேடி தெரிவித்தார்.

“மரண தண்டனை விதிப்பது ஒவ்வொரு வழக்கின் தன்மையைப் பொறுத்தது. ஆனால், நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். போதைப் பொருள் கடத்துபவர் யாரையும் விட்டு விடுவதில்லை. அவர் மில்லியன் கணக்கான மக்களை போதைப் பொருளுக்கு அடிமையாகும்படி தூண்டுகிறார். இது குடும்பங்களை வெகுவாக பாதிக்கிறது,” என்று டாக்டர் கிரண் பேடி விளக்குகிறார்.

“நான் போதைப் பொருள் புழக்கம், குடும்ப வன்முறை ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றேன். அதில் குறிப்பாக மாதர்களும் பிள்ளைகளும் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் செயல்களால் பாதிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

அரசாங்கங்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இந்த அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கிறார் டாக்டர் பேடி.

குறிப்புச் சொற்கள்