3,000க்கும் மேலான என்டியு மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு முழு நிதியுதவி

3,000க்கும் மேலான என்டியு மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு முழு நிதியுதவி

2 mins read
928c3dd5-9c8f-4c25-b04a-9bb54efe6192
தற்போது இருக்கும் அரசாங்க நிதி உதவித் திட்டங்களுடன் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கூடுதலாக மானியம் வழங்கி மாணவர்களின் முழுக் கல்விச் செலவையும் ஏற்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

மிகவும் வசதி குறைந்த, $1,100 வெள்ளி வரையிலான தனிநபர் மாத வருமானம் உள்ள குடும்பங்களிலிருந்து வரும் பட்டக்கல்வி பயிலும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் எதிர்வரும் கல்வி ஆண்டிலிருந்து அந்தப் பல்கலைக்கழகம் ஏற்கும்.

அவர்களுக்கு தற்பொழுது கிடைத்து வரும் கல்வி உதவி நிதியுடன் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கூடுதலாக மானியம் வழங்கி அந்த மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் ஏற்கும்.

இதை அந்தப் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) அன்று தெரிவித்தது.

இந்த மேம்பட்ட நிதியுதவித் திட்டத்தால் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைவர் என்று கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானக் குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி, வாழ்க்கைச் செலவினத்துக்கு ஏற்கெனவே நடப்பில் இருக்கும் மற்ற நிதித் திட்டங்களுடன் புதிய கல்வி நிதியுதவி திட்டமும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எத்தகைய நிதிச் சூழலிருந்து இருந்து வரும் மாணவராக இருந்தாலும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வழங்கும் வளமான, முழுமையான பல்கலைக்கழக அனுபவம் அந்த மாணவருக்கு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்ய எண்ணுகிறோம்,” என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தலைவர் ஹோ டெக் ஹுவா விளக்கினார்.

தற்போது கல்வி உதவி நிதி பெறும் மாணவர்கள் தங்கள் கல்விக்கு ஆகும் செலவில் 54 விழுக்காட்டை மானியமாகப் பெறுகின்றனர் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழம் தெளிவுபடுத்தியது.

இதில் தகுதிபெறும் மாணவர்கள், மீதமுள்ள கல்விக் கட்டணத்தை மற்ற கல்வி உபகாரச் சம்பளம், கல்வி உதவி நிதி ஆகியவற்றின் மூலம் ஈடு கட்டலாம்.

பல்கலைக்கழகத்தின் நிதி உதவி அலுவலகத்தின் அனுமதியுடன் மாணவர்கள் ஆண்டுதோறும் இந்த நிதியுதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்