குடும்ப வன்முறைக்கான 24 மணிநேர அவசர உதவிக்குழுவின் சேவை விரிவடைகிறது

குடும்ப வன்முறைக்கான 24 மணிநேர அவசர உதவிக்குழுவின் சேவை விரிவடைகிறது

2 mins read
d927c823-5973-4cb9-b667-9c52f3ec3644
குடும்ப வன்முறை அவசர உதவிக் குழு அதிகாரி டெசா டே, 30, உளவியல் பயிற்சி பெற்றவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடும்ப வன்முறை சம்பவங்களைக் கையாளும் 24 மணிநேர அவசர உதவிக் குழுவின் சேவைகள் கட்டம் கட்டமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

அபாயமிக்க குடும்ப வன்முறைச் சம்பவங்களைக் கையாளும் திறன்படைத்த சமூக சேவை நிபுணர்களும் காவல்துறையினரும் அந்தக் குழுவில் உள்ளனர். வரும் மாதங்களில் அந்தக் குழுவின் சேவைகள் விரிவுபடுத்தப்படும்.

குடும்ப வன்முறை அவசர உதவிக் குழுவின் முதற்கட்ட சேவைகள் 2023 ஏப்ரலில் தொடங்கப்பட்டன.

அங் மோ கியோ, சிராங்கூன் மற்றும் செங்காங் வட்டாரங்களில் அச்சேவைகள் அறிமுகம் கண்டன. அந்த வட்டாரங்கள் அங் மோ கியோ காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்டவை.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பணியாளர்கள் அந்தக் குழுவின் அதிகாரிகளாக உள்ளனர்.

சமூக சேவை, உளவியல் போன்றவற்றில் பயிற்சி பெற்ற அவர்கள், 12 மணி நேர சுழற்சி முறை பணியில் ஈடுபடுவர் என்று அமைச்சின் பெரியவர் பாதுகாப்புச் சேவைக்கான இயக்குநரான திருவாட்டி தபிதா ஓங் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் செயல்படத் தொடங்கியது முதல் ஆண்டிறுதி வரை 119 குடும்ப வன்முறைச் சம்பவங்களை அவசர உதவிக் குழு கையாண்டது. பெரும்பாலான சம்பவங்களில் வாழ்க்கைத் துணையை உடல்ரீதியாகத் துன்புறுத்தியதை குழு அறிந்ததாக திருவாட்டி ஓங் கூறினார்.

குடும்ப வன்முறை தொடர்பான பணிக்குழு கடந்த 2021ஆம் ஆண்டு வெளியிட்ட பரிந்துரைகளின் ஒரு பகுதியாக அவசர உதவிக் குழு அமைக்கப்பட்டது.

பணிக்குழுவுக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ‌ஷுவெலிங்கும் உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷாலும் தலைமை ஏற்றனர்.

குடும்ப வன்முறைக்கு ஆளாவோரை ஆதரித்து அவர்களுக்கான பாதுகாப்பை எந்த வகையில் அதிகரிக்கலாம் என்பதைக் கவனிக்கவும் குடும்ப வன்முறை தீர்வில் உள்ள இடைவெளியைக் கவனிக்கவும் 2020ஆம் ஆண்டு அந்த பணிக்குழு நிறுவப்பட்டது.

குடும்ப வன்முறை தொடர்பான புகார் காவல்துறைக்கு வந்ததும் வன்முறைச் சம்பவம் ஆராயப்படும். அபாயம் அதிகம் உள்ளதாக கருதப்பட்டால் அவசர உதவிக் குழு அதிகாரிகள் காவல்துறையுடன் இணைந்து அச்சம்பவத்தைக் கையாள்வர்.

அந்தக் குழுவின் அதிகாரிகளுள் ஒருவரான திருவாட்டி டெசா டே, 30, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குப் பேட்டி அளித்தார்.

வன்முறைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவருடனும் அதற்குக் காரணமானவருடனும் தங்களது அதிகாரிகள் சந்தித்துப் பேசி நிலைமையை ஆராய்வார்கள் என்றார் அவர்.

பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பதற்கான திட்டம் வகுக்கப்படும் வரை அவர் பாதுகாப்பு நிபுணர் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் கூறிய திருவாட்டி டே, உளவியல் பயிற்சி பெற்றவர்.

குறிப்புச் சொற்கள்