தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கே ஊர்வலத்தில் அனைத்துலக நடனக் குழுக்கள்

2 mins read
c22873f6-0c50-4d55-86fe-5ef2a1c622df
இவ்வாண்டு சிங்கே ஊர்வலத்தில் நடனம் படைக்க இருக்கும் திருவாட்டி மல்லிகா மாணிக்கம், 51. மக்கள் கழகத்தின் இந்தியப் பிரிவில் அங்கம் வகிக்கிறார் இவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் சிங்கே ஊர்வலம் இவ்வாண்டு பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் அலங்காரம் மிகுந்த அணிவகுப்பாக இடம்பெற உள்ளது. அனைத்துலக நடனக் குழுக்களுடன் குழந்தைகளின் இசை நாடகக் காட்சியும் ஊர்வலத்தை அலங்கரிக்க உள்ளன.

16,000 பேர் பங்கேற்கும் சிங்கே ஊர்வலம், எஃப்1 கார் பந்தய பாதையில் கண்ணைக் கவரும் அம்சமாக அமையும்.

அந்தப் பாதையில் அமைந்துள்ள கட்டடத்தில் இரவு 8 மணியளவில் பல்வேறு மேடை நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளன. ஏறக்குறைய 3,500 கலைப் படைப்பாளர்கள் அதில் பங்கேற்பர்.

கார் பந்தயப் பாதையில் 230 மீட்டர் நீளத்துக்கு, நிகழ்ச்சிப் படைப்புகளுக்கு மெருகூட்டும் வகையில் கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்திருக்கும். சிங்கப்பூரின் ஆகப்பெரிய அணி ஊர்வலமாக அது அமையும்.

சிங்கப்பூரின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில், ‘பிளாசம்’ என்ற கருப்பொருளில் ஏழுவிதமான ஊர்வலங்கள் இடம்பெறும். நேரடி இசை நிகழ்ச்சிகளும் ஊர்வலங்களின் ஓர் அங்கமாக இருக்கும்.

இவ்வாண்டின் கருப்பொருள் பாடலை சிங்கேயின் ஆக இளைய இசையமைப்பாளரான 23 வயது ராபீ சே, உதவி இசையமைப்பாளர் ஜேசன் கெல்சென் ஆகியோர் தயாரித்து உள்ளனர்.

சீனா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் நடனக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் உள்ளூரைச் சேர்ந்த பிரேசில் நடனப் படைப்பாளர்களும் இடம்பெறுவர்.

மக்கள் கழகத்தின் இந்தியப் பிரிவில் அங்கம் வகிக்கும் திருவாட்டி மல்லிகா மாணிக்கம், 51, என்பவரும் சிங்கே ஊர்வலத்தை அலங்கரிக்க உள்ளார்.

சனிக்கிழமை (பிப்ரவரி 3) ஊடகத்தினருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் நடத்தப்பட்ட முன்னோட்டக் காட்சியின்போது அவரது நடனம் இடம்பெற்றது.

தமது ஐந்து வயது முதல் நடனமாடி வரும் திருவாட்டி மல்லிகா, இதுவரை எட்டு முறை சிங்கே ஊர்வலத்தில் பங்கேற்று நடனமாடி உள்ளார். குறிப்பாக, இந்த ஆண்டு சிங்கே ஊர்வலத்தில் நிகழ்ச்சி படைக்க அழைப்பு வந்தது தமக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்ததாக அவர் கூறினார்.

நிகழ்ச்சியைச் சிறப்பாகப் படைக்க கடந்த நவம்பர் மாதம் முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் திருவாட்டி மல்லிகா.

குறிப்புச் சொற்கள்