காமன்வெல்த் தாக்குதல் சம்பவம்: 20 வயது சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு

காமன்வெல்த் தாக்குதல் சம்பவம்: 20 வயது சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு

1 mins read
afa977fd-92b0-49b8-941d-a8529cd7b802
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்திகள் (வலப்படம்). - படம்: சாவ்பாவ்

காமன்வெல்த் வட்டாரத்தில் பிப்ரவரி 3ஆம் தேதியன்று நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஏழு பேரைக் காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 20 வயது ஆடவர்மீது திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சுமத்தப்பட்டது.

பயங்கர ஆயுதம் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக அந்த ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இச்சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரும் ஆறு வயதிற்கும் 76 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவரின் பெயர் ஜோசஃப் லாவ் ஜின் ஹுவா.

நீதிமன்ற ஆவணங்களின்படி, மருத்துவப் பரிசோதனைக்காக ஜோசஃப் சாங்கி சிறைச்சாலையின் மருத்துவ நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

காவல்துறையினர் வருவதற்கு முன்பு, ஜோசஃப் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதற்காக 5 பேர் அடங்கிய பொதுமக்கள் குழு ஒன்று நெகிழி நாற்காலிகளையும் கம்பங்களையும் வைத்துகொண்டு அவரைப் பின்தொடர்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிப்ரவரி 4ஆம் தேதி செய்தி வெளியிட்டது.

இவ்வழக்கு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படிகள் ஆகியவை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்