தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் கேப்பிட்டாலேண்ட் சென்னையில் $43.2 மி. முதலீடு

2 mins read
cb904b46-0a0b-4d6b-80c6-9476fea85e54
‘ஒன்ஹப் சென்னை’யில் மூன்று தொழிற்கூடங்களை குத்தகை அடிப்படையில் கேப்பிட்டாலேண்ட் இந்தியா டிரஸ்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. - படம்: கேப்பிட்டாலேண்ட் இந்தியா டிரஸ்ட்

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒன்ஹப் சென்னை தொழிற்பேட்டையில் சிங்கப்பூரின் கேப்பிட்டாலேண்ட் இந்தியா டிரஸ்ட் நிறுவனம் $43.2 மில்லியன் முதலீடு செய்து உள்ளது.

அந்தத் தொழிற்பேட்டையில் மூன்று தொழிற்கூடங்களை அந்நிறுவனம் வாங்கி உள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (பிப்ரவரி 5) தெரிவித்தார்.

இந்த விற்பனைப் பரிவர்த்தனையின் மொத்த தொகை 2.7 பில்லியன் ரூபாய் (S$43.7 மில்லியன்). இதில் ஒரு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள நிலத்திற்கான குத்தகைக்கான தொகை.

ஒன்ஹப் சென்னை என்பது தேவையான கட்டமைப்புகள் அனைத்துடனும் நல்ல முறையில் உருவாக்கப்பட்ட தொழிற்துறை நகரம் என்று கேப்பிட்டாலேண்ட் இந்தியா டிரஸ்ட்டின் தலைமை நிர்வாகி சஞ்சீவ் தாஸ்குப்தா தெரிவித்தார்.

‘கசா கிராண்ட் குரூப்’ குழுமத்திடம் இருந்து தொழிற்கூடங்களை வாங்கிய பின்னர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அந்தக் கூடங்களில் வர்த்தகம் நடத்துவோருக்கு உயர்தரமான வசதிகளை தமது நிறுவனத்தால் வழங்கமுடியும் என்றார் அவர்.

இந்த பிப்ரவரி மாதம் முதல் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மூன்று கட்டங்களாக 1.9 பில்லியன் ரூபாய் வரை சிங்கப்பூர் நிறுவனம் நிதி அளிக்கும்.

தொழிற்கூட கட்டுமானம் ஒவ்வொரு கட்டமாக நிறைவுபெற்றதும் அவற்றை அந்நிறுவனம் கைப்பற்றும்.

99 ஆண்டுகள் வரை குத்தகை புதுப்பிக்கப்படக்கூடிய 7.95 ஹெக்டர் நிலத்திற்கான மேம்பாட்டுத் திட்டம் நான்கு ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும்.

790,000 சதுர அடி பரப்பளவு உள்ள மொத்த குத்தகை நிலத்தில் முதற்கட்டத் திட்டம் 480,000 சதுர அடியில் நிறைவேற்றி முடிக்கப்படும்.

இரண்டாவது கட்டம் 160,000 சதுர அடி நிலத்திலும் இறுதிக்கட்டம் 150,000 சதுர அடி நிலத்திலும் நிறைவேறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்