டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பு

டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பு

1 mins read
59cb28bf-efd7-49ba-843a-87ba695aa4c1
டெங்கியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள லென்டோர் கிரசெண்ட் வட்டாரத்தில் கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்கும் நோக்கில் சோதனை நடத்தப்பட்டது. - படம்: சாவ்பாவ்

இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஆண்டு தொடங்கி முதல் சில வாரங்களிலேயே இவ்வளவு அதிகமான டெங்கி சம்பவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவாகியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பதிவான டெங்கி சம்பவங்களில் இது ஐந்தில் ஒரு பங்கு.

இந்நிலையில், தொடர்ந்து ஒன்பது வாரங்களாக டெங்கி சம்பவம் அதிகரித்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை கவலைக்குரியது என்று அது கூறியது.

ஆனால் டெங்கியால் இவ்வாண்டு மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படுமா என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது என்று வாரியம் தெரிவித்தது.

ஜனவரி 28ஆம் தேதிக்கும் பிப்ரவரி 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 494 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டது.

அதையடுத்து, பிப்ரவரி 6ஆம் தேதி காலை 11 மணி நிலவரப்படி மேலும் 185 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கியால் தற்போது 96 வட்டாரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

அங் மோ கியோ அவென்யூ1, 3 மற்றும் ஸ்திரீட் 31 பகுதிகள் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வட்டாரத்தில் 106 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அவர்களில் 48 பேருக்குக் கடந்த இரண்டு வாரங்களில் டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டது.

அங் மோ கியோ அவென்யூ 1 புளோக் 303ல் மட்டும் 19 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்