மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி: தனியார்மருந்தகங்களில் பதிவு செய்ய ஆலோசனை

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி: தனியார்மருந்தகங்களில் பதிவு செய்ய ஆலோசனை

2 mins read
be2d84d2-ee80-4be5-80cd-c1b43662d087
பலதுறை மருந்தங்களில் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜிக்காக பதிவு செய்தவர்களில் 81 குடியிருப்பாளர்கள் வழக்கமான நோயாளிகள். எஞ்சிய 19 விழுக்கட்டினர் வழக்கமாக வராத புதிய நோயாளிகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள 25 பலதுறை மருந்தகங்களில் 19ல் ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ பதிவுக்கு இன்னமும் போதுமான இடங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தனியார் பொது மருந்தகங்களில் பதிவு செய்ய குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். 700,000க்கும் மேற்பட்டோருக்கு தனியார் பொது மருந்தகத்தில் பதிவு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி இந்த விவரங்களை புதன்கிழமை (7-2-2024) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

அல்ஜுனியட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜெரால்ட் கியாம் யீன் சொங், பலதுறை மருந்தகங்களில் ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ பதிவுக்கு உள்ள இடங்கள் குறித்து கேள்வி கேட்டார்.

“சில நோயாளிகள் தாங்கள் வழக்கமாக செல்லும் பலதுறை மருந்தகங்களில் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜிக்கு பதிவு செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் தங்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத தனியார் பொது மருந்தகங்களில் அவர்கள் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது,” என்று திரு கியாம் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த டாக்டர் ஜனில் புதுச்சேரி, மேலும் ஆரோக்கியமான எஸ்ஜிக்கு தேவையான இடங்கள் பலதுறை மருந்தகங்களின் அளவு, வேலைச் சுமையைப் பொறுத்து மாறுபடும் என்றார்.

ஒவ்வொரு பலதுறை மருந்தகங்களிலும் சராசரி 30,000 இடங்கள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

மொத்தமுள்ள 25 பலதுறை மருந்தங்களில் 19ல் இன்னமும் இடங்கள் காலியாக இருக்கின்றன. ஆறு மருந்தகங்கள் தங்களுடைய வழக்கமான நாட்பட்ட நோயாளிகளுக்கு இடங்களை ஒதுக்கி வைத்துள்ளன.

இந்த நிலையில் தனியார் பொது மருந்தகங்களில் ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’க்கு பதிவு செய்ய அமைச்சர் ஜனில் புதுச்சேரி குடியிருப்பாளர்களை ஊக்குவித்துள்ளார்.

‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ முக்கிய அம்சங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பலன்கள் முழு மானியத்துடன் நீட்டிக்கப்படவுள்ளது. மருத்துவர் ஆலோசனை, உடல் சுகாதாரப் பரிசோதனை, தடுப்பூசி, தனியார் மருந்தகங்களில் நாட்பட்ட நோய்களுக்கு மானியத்துடன்கூடிய மருந்துகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

தற்போது ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ பதிவுக்கு 700,000க்கும் மேற்பட்டோருக்கு தனியார் மருந்தகங்களில் இடமுள்ளதாக திரு புதுச்சேரி கூறினார்.

மருந்தகங்களில் 65 விழுக்காட்டினர் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜிக்கு பதிவு செய்துள்ளனர்.

பலதுறை மருந்தகங்களில் பதிவு செய்தவர்களில் 81 விழுக்காட்டினர் தற்போதைய வழக்கமான நோயாளிகள். எஞ்சிய 19 விழுக்காடு குடியிருப்பாளர்கள் வழக்கமில்லாத, புதிய நோயாளிகள்.

பலதுறை மருந்தகங்களுக்கு வழக்கமாக வரும் நோயாளிகளில் 26 விழுக்காட்டினர் பொது மருத்துவர் மருந்தகங்களில் பதிவு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்