போதைப்பொருள் புழக்கம்; மூன்று சிறுமியர் கைது

போதைப்பொருள் புழக்கம்; மூன்று சிறுமியர் கைது

2 mins read
4cef9102-c448-423a-953a-902472923d7d
13 வயது சிறுமியின் வீட்டிலிருந்து, போதைப்பொருளுக்காகப் பயன்படுத்திய சாதனம் பிடிபட்டது. - படம்: சிஎன்பி

போதைப்பொருள் உட்கொண்ட பதின்ம வயதுடைய மூன்று சிறுமியர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவரின் வயது 14; மற்ற இருவரின் வயது 13.

சில வேளைகளில் போதைப்பொருள் உட்கொண்டதை ஒப்புக்கொண்ட பின்னர் அம்மூவரும் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) வியாழக்கிழமை (பிப்ரவரி 8) தெரிவித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை 14 வயது சிறுமி ஒருவரின் அறையை அதிகாரிகள் சோதனை செய்தபோது கறைபடிந்த பொட்டலங்கள் காணப்பட்டன.

போதைப்பொருள் உட்கொண்டதை அச்சிறுமி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சிறுமியின் இரு நண்பர்களும் அவர்களின் வீட்டில் கைது செய்யப்பட்டனர்.

13 வயதுடைய அந்த இருவரில் ஒருவர் போதைப்பொருளுக்காகப் பயன்படுத்திய சாதனத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

‘ஐஸ்’ என்று பரவலாக அழைக்கப்படும் ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருளை 14 வயது சிறுமி ஓராண்டுக்கு முன்பிருந்து புழங்கி வந்தது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

ஆகக் கடைசியாக, கைதாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தமது வீட்டில் இரு நண்பர்களுடன் போதைப்பொருளை உட்கொண்டார்.

தமது நண்பர்கள் போதைப்பொருள் உட்கொள்வதைக் கண்ட 13 வயது சிறுமி, ஆர்வத்தில் அவரும் உட்கொள்ளத் தொடங்கியதும் தெரிய வந்தது.

கைதான மூன்று சிறுமியரிடமும் விசாரணை தொடருகிறது.

சிறுமியர் கைது செய்யப்பட்ட சம்பவம் மனநலக் கழகம் 2022ஆம் ஆண்டு நடத்திய சுகாதாரம் மற்றும் வாழ்க்கைபாணி ஆய்வு கண்டறிந்தவற்றை பிரதிபலிப்பதாக சிஎன்பி கூறியது.

போதைப்பொருளை உட்கொள்ளத் தொடங்குவோரின் சராசரி வயது 15.9 என்று ஆய்வு கண்டறிந்தது. மேலும், போதைப்பொருள் உட்கொள்வோரில் 41.8 விழுக்காட்டினர் 18 வயதுக்கு முன்பே அந்தப் பழக்கத்தைத் தொடங்கியதும் ஆய்வில் தெரிய வந்தது.

குறிப்புச் சொற்கள்