சட்டவிரோத ஒளிபரப்பு இணையப்பக்கங்களால் கூடுதல் இணைய ஊடுருவல் அபாயம்

2 mins read
f9b3cd8b-3e07-4f15-9045-5f43727e7288
சட்டவிரோதமான சாதனங்கள் மூலம் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டங்களைக் காண்போரின் இணையக் கட்டமைப்பு ஊடுருவப்படுவதற்கான அபாயமும் இணையம் வழி மோசடிகளால் பாதிப்படைவதற்கான சாத்தியங்களும் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சட்டவிரோத ஒளிபரப்பு இணையப்பக்கங்களாலும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் காண வகை செய்யும் ஆன்ட்ரோய்ட் தொலைக்காட்சி சாதனங்களாலும் இணைய ஊடுருவல் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இது தெரியவந்துள்ளது.

இணைய ஊடுருவலுக்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் அவற்றில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இத்தகைய சட்டவிரோதமான சாதனங்கள் மூலம் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டங்களைக் காண்போரின் இணையக் கட்டமைப்பு ஊடுருவப்படுவதற்கான அபாயமும் இணையம் வழி மோசடிகளால் பாதிப்படைவதற்கான சாத்தியங்களும் மற்றவர்களைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் ஏற்பாட்டின்கீழ் நடத்தபட்ட இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளை மெல்பர்னில் செயல்படும் ‘சைபர்ஸ்டிரோனமி’ இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான பேராசிரியர் பால் வாட்டர்ஸ், சமூக அறிவியல் ஆய்வுக் கட்டமைப்பில் பிரசுரம் செய்தார்.

சட்டவிரோதமான முறையில் விளையாட்டுகளைக் காண சிங்கப்பூரில் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்படும் 25 சட்டவிரோத ஒளிபரப்பு இணையப்பக்கங்களை பேராசிரியர் வாட்டர்ஸ் ஆராய்ந்தார்.

அவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் இரண்டில் ஒரு விளம்பரம், இணைய ஊடுருவலுக்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருளைக் கொண்டிருக்கக்கூடும் அல்லது மோசடி இணையப்பக்கங்களுக்குக் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட 25 இணையப்பக்கங்களில் 19 இணையப்பக்கங்கள் இன்றும் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

திருத்தப்பட்ட காப்புரிமைச் சட்டத்தின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் $100,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு $200,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தற்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களை சிங்கப்பூரில் ஒளிபரப்பும் உரிமைகளை ஸ்டார்ஹப் நிறுவனம் மட்டுமே பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்