முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஆஸ்திரேலியாவில் தம்முடைய மகனின் பல்கலைக்கழகப் படிப்புக்கு உதவ சிங்கப்பூரைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு அவர் நாடு கடந்து செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
அவ்வாறு அனுமதிக்கக் கோரும் ஈஸ்வரன் விண்ணப்பத்தின் மீது அரசுத்தரப்பு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.
பிணைத்தொகையாக $500,000 ரொக்கம் செலுத்த வேண்டும், பயணத் திட்டங்களை விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும், அந்த அதிகாரியுடன் தொடர்பில் இருக்க வேண்டும் போன்றவை அந்த நிபந்தனைகளுள் அடங்கும்.
மேலும், சிங்கப்பூர் திரும்பிய 24 மணி நேரத்தில் ஈஸ்வரன் தமது பயண ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்.
$800,000 பிணையில் வெளியே இருக்கும் ஈஸ்வரன் வியாழக்கிழமை (பிப்ரவரி 8) பிற்பகல் 2.30 மணியளவில் அரசு நீதிமன்றத்திற்கு வந்தார். தம்மை விடுப்பில் அனுமதிக்க வேண்டி அவர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார்.
அவரது வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். இவ்வழக்கில் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் வலுவான கருத்துகளின் அடிப்படையில் இவ்வாறு செய்யப்படுவதாக அரசுத்தரப்பு தெரிவித்தது.
அமைச்சராக இருந்தபோது சொத்துச் சந்தை தொழிலதிபர் ஓங் பெங் செங்கிடம் இருந்து $200,000க்கும் மேற்பட்ட மதிப்பு உடைய பொருள்களை பெற்றதாக ஈஸ்வரன் மீது 24 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயத்துக்கான நுழைவுச்சீட்டுகள், பிரிட்டனில் நடைபெற்ற காற்பந்துப் போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் ஆகியன அந்தப் பொருள்களில் அடங்கும்.
அத்துடன், 2015ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்புடைய பல குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன.
2023 மே 25ஆம் தேதி, நீதி நடைமுறையைத் தடுத்த ஒரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குகிறார்.
ஈஸ்வரன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
வேறொரு சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
லஞ்ச ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக ஓங் பெங் செங்கும் அதே மாதம் கைது செய்யப்பட்டார்.
ஈஸ்வரனைப் பிரதிநிதித்து மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் முன்னிலையானார்.
அரசுத் தரப்பில், தலைமை அரசு வழக்கறிஞர் டான் கியட் ஃபெங் தலைமையிலான வழக்கறிஞர் அணி வாதாடியது.
ஈஸ்வரன், மக்கள் செயல் கட்சியிலிருந்தும் போக்குவரத்து அமைச்சர் பொறுப்பில் இருந்தும் வெஸ்ட் கோஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் சென்ற மாதம் விலகினார்.