கடல்நாக ஆண்டில் இளம் தம்பதியர் குழந்தை பெற பிரதமர் லீ வலியுறுத்து

2 mins read
d955fb01-0041-4151-8de9-bf1072688247
பிரதமர் லீ சியன் லூங். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

பிறக்கும் கடல்நாக ஆண்டில் இளம் தம்பதியர் குழந்தைகள் பெற்றுக்கொள்ள பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார். இதற்கு அரசாங்கமும் தனது பங்கை ஆற்றும் என்று தமது சீனப் புத்தாண்டுச் செய்தியில் திரு லீ குறிப்பிட்டு உள்ளார்.

‘குடும்பங்களை உருவாக்கும் சிங்கப்பூர்’ என்பதைக் கட்டிக்காக்கும் வகையில் திருமணம் மற்றும் பெற்றோர் பருவத்திற்கான சிங்கப்பூரர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அரசாங்கம் உதவும் என்றார் அவர்.

“கடல்நாக ஆண்டில் குழந்தை பிறப்பதை பல சீனக் குடும்பங்கள் நற்பேறாகக் கருதுகின்றன. கடல்நாகம் என்பது ஆற்றல், பலம் மற்றும் அதிர்ஷ்டத்தின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. எனவே இளம் தம்பதியினர் தங்களது குடும்பத்தில் பிள்ளை என்னும் ‘குட்டி கடல்நாக’த்தை இணைத்துக்கொள்ள இது நல்ல காலம்,” என்றார் பிரதமர்.

சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் ஒவ்வொரு 1,000 பேரை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. அதன்படி, 1960களிலிருந்து பிறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

அதேநேரம், சீனர்களின் ஆண்டுப்பலன் நாட்காட்டியில் கடல்நாகத்தைக் குறிக்கும் ஆண்டுகளான 1964, 1976, 1988, 2000, 2012 ஆகிய ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்து வந்துள்ளது.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் 2022ஆம் ஆண்டில் 1.04 என்னும் அடிமட்டத்தைத் தொட்டது. இதற்கு முன்னர் ஆகக் குறைவு என்று கருதப்பட்ட 2.1 என்பதைக் காட்டிலும் குறைந்தது.

உலகம் முழுவதுமே பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர் போன்ற முன்னேறிய சமூகங்களில் அதனைக் காணலாம் என்று பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் லீயும் கடல்நாக ஆண்டில் பிறந்தவர்தான். சீனப் புத்தாண்டின் முதல்நாளில் அவருக்கு 72 வயது ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

குழந்தை பெற்றுக்கொள்வது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றும் திரு லீ குறிப்பிட்டார். ஒவ்வொரு தலைமுறைக்கும் வெவ்வேறு விருப்பங்கள் இருக்கும். பல இளையர்கள் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பதற்கும் தங்களது துணையுடன் நேரத்தைச் செலவிடுவதற்கும் இதர விருப்பங்களிலும் முன்னுரிமை தரக்கூடும் என்றார் அவர்.

குழந்தை பெற விரும்பினாலும் திருமண வாழ்க்கையைத் தொடங்குவதை அவர்கள் தள்ளிப் போடக்கூடும் என்று கூறிய திரு லீ, பெற்றோர் ஆக விரும்புவோருக்கு அரசாங்கம் தனது ஆதரவை படிப்படியாக அதிகரிக்கும் என்றார்.

முக்கியமாக, கைக்குழந்தை பராமரிப்பு மற்றும் வேலை-வாழ்க்கை நல்லிணக்கம் போன்றவற்றுக்கான ஆதரவை அவர் குறிப்பிட்டார்.

எல்லா சிங்கப்பூரர்களும் நல்ல ஆரோக்கியம் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்க சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

“கடல்நாக ஆண்டில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் முன்னேறுவோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்