புக்கிட் பாத்தோக் வீட்டில் தனது அண்டை வீட்டுக்காரரை ஜனவரி மாதம் கொலை செய்ததாக நம்பப்படும் 65 வயது ஆடவரின் விசாரணைக் காவலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்க நீதிமன்றம் பிப்ரவரி 9ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
திரு குவேக் எங் ஹோக் எனும் அந்த ஆடவர் சில நாள்கள் உடல்நலமில்லாமல் இருந்ததால், இப்போதுதான் அவரது மனநலப் பரிசோதனையை நடத்த முடியும் என்று அரசுத் தரப்பு நீதிபதியிடம் கேட்டுக்கொண்டது.
பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9.15 மணிக்கு காணொளி வழியாக நீதிமன்றத்தில் தோன்றிய குவேக், தனது தம்பியும் சகோதரியும் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார்களா என்று மாண்டரின் மொழியில் கேட்டார்.
அவர்களின் பெயர்கள் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டன. ஆனால், யாரும் வரவில்லை. இவ்வழக்கு மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜனவரி மாதம் 6ஆம் தேதியன்று, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9, புளோக் 460B-யில் உள்ள ஒரு வீட்டில் குவேக், தனது அண்டை வீட்டுக்காரரான 43 வயது மாதை கொலை செய்தார் என்று நம்பப்படுகிறது. கொலை செய்யப்பபட்டவரின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இறந்த மாதின் ஐந்து வயது மகன் காயம் காரணமாக சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஜனவரி 6ஆம் தேதி உதவி கேட்டு தங்களுக்குக் காலை 8.20 மணிக்கு அழைப்பு வந்தது என்று காவல்துறை தெரிவித்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ ஊழியர்கள் மாதின் மரணத்தை அங்கு உறுதிப்படுத்தினர். குவேக் அங்கேயே கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் அந்த புளோக்கில் குப்பைக் கிடங்கை காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படும் ஒரு கத்தி கண்டுபிடிக்கப்பட்டது.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.