தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உரிமம் இல்லாத நாணய மாற்று செயல்பாடுகள்: 15 பேர் மீது விசாரணை

1 mins read
1ec6324c-ba9c-4dcf-b4e8-5b25f5ade497
$140,000 மதிப்புள்ள சூதாட்டச் சில்லுகள், ரொக்கம் மற்றும் கைப்பேசிகள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. - படங்கள்: சிங்கப்பூர் காவல்துறை

மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் உரிமம் இல்லா பணமாற்று, பணம் அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் விசாரணையை எதிர்நோக்குகின்றனர்.

அவர்கள் 28 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் எட்டு பேர் ஆண்கள், எழுவர் பெண்கள் என்றும் அவர்கள் பிப்ரவரி 5, 6 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல்துறை பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் காவல்துறை விசாரணையில் உதவி வருகின்றனர்.

மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் காவல்துறை மேற்கொண்ட இரண்டு நாள் நடவடிக்கையில், $140,000க்கு மேற்பட்ட மதிப்புள்ள சூதாட்டச் சில்லுகள், ரொக்கம், கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேகப் பேர்வழிகள் 15 பேரும், வெளிநாட்டு பணமாற்று, பணம் அனுப்பும் நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களிடம் சூதாட்டச் சில்லுகள் விற்பது, வாங்குவது போன்ற உரிமம் இல்லா சேவைகளை வழங்கி வந்ததாக நம்பப்படுகிறது.

உரிமம் இல்லாமல் பணம் தொடர்பான சேவைகளை வழங்கும் வர்த்தகத்தை மேற்கொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு $125,000 வரையிலான அபராதம், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

சூதாட்டக்கூடத்தில் விளையாடுவதற்குத் தவிர, சூதாட்டச் சில்லுகளைப் பயன்படுத்துவோரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு $10,000 வரையிலான அபராதம் அல்லது 12 மாதங்கள் வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்