சிங்க நடனத்தில் வீறுநடை போடும் தமிழ் இளையர்கள்

3 mins read
1a0d27e9-a72a-4c01-99e3-371f03b6ebd7
தமது சிங்க நடனக் குழுவினரோடு பிரின்ஸ் ஷான் (நடுவில்). - படம்: நடராஜ்
multi-img1 of 4

சிறு வயதில் சிங்க நடனத்தின்மீது எழுந்த ஆர்வம் இன்று 11 ஆண்டுகள் கழித்தும் 23 வயதாகும் பிரின்ஸ் ஷானுக்கு சற்றும் குறையவில்லை.

சிங்க நடனக் குழுவில் முரசறையும் ஷான்.
சிங்க நடனக் குழுவில் முரசறையும் ஷான். - படம்: நடராஜ்

சீனப் புத்தாண்டுக்குப் பிறகு மேளதாளத்தோடு சிங்க நடனக் குழுவினர் நம் குடியிருப்புப் பேட்டைகளை வலம்வரும் காட்சிகளை நாம் மறந்திருக்க முடியாது.

அந்தக் காட்சிகளை உற்றுக் கவனித்த ஷானுக்கு நடனக் குழுவில் சேர ஊக்கம் பிறந்தது.

சூன் லீ டேங் அசோசியேஷன் சிங்க நடனக்குழுவில் உறுப்பினராக இருக்கும் ஷான், அதில் புதிதாகச் சேரும் இளையர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.

குழுவில் இருந்த இதர சீன இளையர்கள் தன்னை தொடக்கத்தில் வியப்புடன் பார்த்தபோதிலும் காலப்போக்கில் தன்னை ஒரு சகோதரனாக ஏற்றுக் கொண்டதாக ஷான் கூறினார்.

சிங்க நடனக் குழுவில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று அக்கலையில் ஈடுபடுகின்றனர். ஷான் அதில் முரசறைபவராக உள்ளார்.

முரசடிக்கும் திறனை மெருகூட்ட இவருக்கு மலேசியாவின் மூவார் நகரில் ஒரு வாரப் பயிற்சியும் வழங்கப்பட்டது. சிங்க நடனத்தின் அசைவுகளுக்கு ஏற்றவாறு முரசை அடிக்க வேண்டும் என்றார் அவர்.

சீனப் புத்தாண்டு போன்ற விழாக்காலங்களுக்கு அப்பாற்பட்டு ஷான் தனது குழுவினருடன் கைகோத்து உள்ளூரிலும், வெளியூரிலும் பல சிங்க நடன போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். 

சிங்க நடனக் குழுவுடன் இணைந்து பல ஆண்டுகளாகப் பயணம் செய்துவரும் ஷான், சீன மொழியையும் ஓரளவு கற்றுக்கொண்டுள்ளார்.

முழு நேர சிகை அலங்கார நிபுணராக இருக்கும் ஷான் வாரத்தில் மூன்று நாள்கள் நடனப் பயிற்சிக்கு ஒதுக்குகிறார்.

கலைமீது வைத்துள்ள தீவிரப் பற்றின் காரணமாக உடல் சோர்வு அவருக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

இக்கலையை இறுதிவரை கைவிடப் போவதில்லை எனக் கூறும் ஷான், சீனக் கலாசாரம் மற்றும் சீன வழிபாட்டின் மீதும் ஈடுபாடு கொண்டுள்ளார்.

கிறிஸ்தவரான அவர் நேரம் கிடைக்கும் போது தன் சீன நண்பர்களுடன் ஜாலான் காயுவில் இருக்கும் சீன கோவிலுக்கு சென்று வருவார்.

ஆசிரியர் புகட்டிய ஈடுபாடு

வளைந்து நெளிந்து சிங்க நடனமாடும் ராம்கிஷன், 20, 13 ஆண்டுகளாக அக்கலைக்குத் தன்னை அர்ப்பணித்து வருகிறார்.

சிங்க நடனக் குழுவில் நடனமாடும் ராம்கிஷன் (நடுவில்). 
சிங்க நடனக் குழுவில் நடனமாடும் ராம்கிஷன் (நடுவில்).  - படம்: ராம்கிஷன்

தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ராம்கிஷன் சிறு வயதிலிருந்து சீன மொழியைத் தாய்மொழிப் பாடமாகக் கற்று வருகிறார்.

தாய்மொழி ஆசிரியர் இணைப்பாட நடவடிக்கையாகத் தன்னைச் சிங்க நடனக் குழுவில் சேரச் சொன்னபோது ராம்கிஷன் தொடக்கத்தில் அரைமனத்துடன் இருந்தார்.

ஆசிரியர் புகட்டிய ஆர்வம், இன்று அக்கலையை எக்காரணத்திற்காகவும் கைவிடப் போவதில்லை என்று உறுதியுடன் இருக்கும் அளவிற்கு ராம்கிஷனை மாற்றியுள்ளது.

ஸ்டாம்ஃபர்ட் கடல்நாக சிங்கக் கலை, கலாசாரக் குழுவில் இடம்பெற்றுள்ள ராம்கிஷன், சிங்க நடனத்தில் ஆர்வம் காட்டியபோது அவருடைய பெற்றோர் பெரிதாக ஆதரவு அளிக்கவில்லை.

தந்தையார் இந்திய மரபுடன் பின்னிப் பிணைந்திருப்பவர் என்ற ராம்கிஷன், “சிங்க நடனத்தில் முழு மனத்தோடு ஈடுபடுவதைப் பார்த்ததும் அவர் எனது நாட்டத்தை ஏற்றுக்கொண்டார்,” என்றார்.

இந்தியராகச் சிங்க நடனத்தில் முதலில் சேர்ந்தபோது பலரும் ராம்கிஷனை வியப்புடன் பார்த்தனர். இன்று அவர் நடன அசைவுகளை அவர்கள் பிரமிப்புடன் காண்கின்றனர்.

புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற நிகழ்வுகள், சீனப் புத்தாண்டுக்கான விழாக்கால நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு அவர் சிங்கே ஊர்வலத்தில் அதிகம் ஈடுபட்டுள்ளார்.

ராம்கிஷன் அக்கலையில் அடங்கியுள்ள அனைத்து பாத்திரங்களையும் கற்றுக்கொண்டுள்ளார்.

சிங்க நடனத்தில் இரு பகுதிகள் உண்டு. சிங்கத் தலை மற்றும் வால் நடனம். இரண்டையும் ஆடும் திறமை கொண்ட ராம்கிஷன், “எனக்கு நடன அங்கம் தான் மிகவும் பிடிக்கும். இடைவிடாமல் வளைந்து ஆடுவது மிக கடினம். தசை வலி உண்டாகும். இருந்தாலும் எனக்கு இது பிடித்துள்ளது.” என்று சொன்னார்.

மேலும் கீழுமாக குதிப்பது, தலைகீழாக நின்று சாகசங்கள் புரிவது என ராம்கிஷன் சிங்க நடனப் பயிற்சியில் தன் உடலை அதிகம் வளைக்க வேண்டியிருப்பதால் அவர் தன் உடல் அமைப்பை அதற்கு ஏற்றதாக வைத்திருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்