தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கித் தவித்த இளையர் சிங்கப்பூரில் உள்ள உறவுகளுடன் இணைந்தார்

2 mins read
849baf7d-b0ab-4878-a818-7c368395e3c9
நிலநடுக்கம் காரணமாக தமக்கு இன்றும் மனதளவில் பாதிப்பு இருப்பதாக 15 வயது முஸ்தஃபா அக்பினார் கூறினார். சிங்கப்பூரில் நிலநடுக்கம் இல்லாதது தமக்கு நிம்மதி அளிப்பதாக அவர் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி துருக்கியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.

நிலநடுக்கம் துருக்கி நேரப்படி அதிகாலை 4.15 மணி அளவில் நிகழ்ந்தது.

அப்போது பலர் தூங்கிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக 15 வயது முஸ்தஃபா அக்பினார் வசித்து வந்த 13 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.

முஸ்தஃபா, அவரது இரண்டு சகோதரிகள், தாயார் ஆகியோர் இடுபாடுகளுக்கு அடியில் சிக்கினர்.

அப்போது துருக்கியில் குளிர்காலம், வெப்பநிலை 2 டிகிரி செல்சியல்.

அந்தக் கடும் குளிரில் உணவு, தண்ணீர் இல்லாமல் முஸ்தஃபாவும் அவரது குடும்பத்தினரும் அவதியுற்றனர்.

மூன்று நாள்கள் கழித்து, அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டனர்.

ஆனால் அவர்களது அண்டைவீட்டார் பலர் மாண்டனர்.

கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து முஸ்தஃபாவை ஆர்ச்சர்ட் சாலை, ஃபார் ஈஸ்ட் பிளாசாவில் உள்ள துருக்கி உணவகம் ஒன்றில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சந்தித்தது.

அந்த உணவகம் முஸ்தஃபாவின் உறவினரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 43 வயது திரு அகமது அக்பினாருக்குச் சொந்தமானது.

சிங்கப்பூருக்கு வரும்படி முஸ்தஃபாவையும் அவரது சகோதரிகளையும் அவர்களது தந்தையின் சகோதரரான திரு அகமது ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது.

முஸ்தஃபாவும் அவரது சகோதரிகளும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிங்கப்பூர் வந்தடைந்தனர். சிங்கப்பூரில் வசிக்க அவர்களுக்குக் குடியுரிமை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

முஸ்தஃபாவுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. அவர் கூறியதை திரு அகமது மொழிபெயர்த்தார்.

தமக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தைப் பற்றி முஸ்தஃபா பகிர்ந்துகொண்டார்.

ஒரே கட்டடத்தில் வசித்த கிட்டத்தட்ட 15 நண்பர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி மாண்டதை அவர் மிகுந்த மனவேதனையுடன் கூறினார்.

நிலநடுக்கம் காரணமாக தமக்கு இன்றும் மனதளவில் பாதிப்பு இருப்பதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரில் நிலநடுக்கம் இல்லாதது தமக்கு நிம்மதி அளிப்பதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்