தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூடுதலாக 5,600 தாதியர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்

2 mins read
7a721d8f-7b01-4ec9-9aa1-d01fa6c1395b
டான் டோக் செங் மருத்துவமனையில் பிப்ரவரி 10ஆம் தேதியன்று சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்) கலந்துகொண்டார். சீனப் புத்தாண்டின் 15வது நாள் கொண்டாட்டங்களுக்கு முன்பு தாதியருக்கான நீண்டகால சலுகைத் திட்டம் தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஓங் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் தாதியரின் எண்ணிக்கையை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளன.

கடந்த ஆண்டு கூடுதலாக 5,600 தாதியர் பணியமர்த்தப்பட்டனர்.

அவர்களில் 4,500 பேர் பணியைத் தொடங்கிவிட்டனர்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிப்ரவரி 10ஆம் தேதியன்று டான் டோக் செங் மருத்துவமனையில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கலந்துகொண்டார்.

நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதல் தாதியர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஊழியர் பற்றாக்குறை எப்போதுமே இருந்து வருகிறது. எனவே, தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளில் மேலும் 4,000 தாதியரைப் பணியமர்த்த இலக்கு கொண்டிருந்தோம். கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது சில தாதியரை இழந்தோம். அதை ஈடுசெய்ய கூடுதல் தாதியரை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டோம். அதே சமயம், ஊழியரணியை விரிவுபடுத்தவும் விரும்பினோம்,” என்று அமைச்சர் ஓங் கூறினார்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் பணிபுரிந்த தாதியரின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த ஆண்டு 3,400 புதிய தாதியர் பணியமர்த்தப்பட்டனர்.

2022ஆம் ஆண்டில் 43,772 தாதியரும் பதிவு செய்யப்பட்ட மகப்பேறு தாதியரும் பணியில் இருந்தனர்.

அவர்களில் 36,995 பதிவு செய்யப்பட்ட தாதியரும் அடங்குவர்.

சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள்தொகைக்கு ஆதரவு அளிக்க 2030ஆம் ஆண்டுக்குள் மருத்துவமனைகள், மருந்தகங்கள், மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் 82,000 தாதியர், சுகாதார நிபுணர்கள், பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோர் தேவைப்படுவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு கூடுதல் வெளிநாட்டுத் தாதியருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசம் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டுத் தாதியரில் பெரும்பாலானோர் பிலிப்பீன்ஸ், மலேசியா, மியன்மார் போன்ற வட்டார நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

சீனப் புத்தாண்டின் 15வது நாள் கொண்டாட்டங்களுக்கு முன்பு தாதியருக்கான நீண்டகால சலுகைத் திட்டம் தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஓங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்