தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சில இணைய நன்கொடை தளங்களுக்கு 2023ல் பண வரவு குறைந்தது

2 mins read
4c9a4fe9-24b1-4f51-af34-f9f498db0776
கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ள பணவீக்கமும் வாழ்க்கைச் செலவினம் குறித்த கவலையும் நன்கொடை அளிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஏறத்தாழ 600 லாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு மக்கள் நன்கொடை அளிக்க வகைசெய்யும் ‘கிவ்விங்.எஸ்ஜி’ (giving.sg) எனும் தேசிய மின்னிலக்க நன்கொடைத் தளத்துக்கு 2023ல் முதல்முறையாக பண வரவு குறைந்தது. அந்த ஆண்டுக்கு முன்னர் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக நன்கொடைகள் அதிகரித்து வந்தன.

கடந்த ஆண்டு அந்தத் தளம் $94.6 மில்லியன் நன்கொடை திரட்டியது. 2022ல் பெறப்பட்ட $98 மில்லியனைவிட இது 3.5 விழுக்காடு குறைவு.

2021க்குப் பிறகு மூன்றாவது முறையாக அந்தத் தளத்துக்கு நன்கொடை அளித்த தனிப்பட்ட பயனாளர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

2020ல் கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கியபோது நன்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த ஆண்டு ஏறக்குறைய 177,000 நன்கொடையாளர்கள் இருந்தனர். ஆனால், அதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் அவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

கடந்த ஆண்டு ஏறத்தாழ 114,000 நன்கொடையாளர்கள் இருந்ததாக கிவ்விங்.எஸ்ஜி தளத்தை மேற்பார்வையிடும் தேசிய தொண்டூழியர் மற்றும் கொடையாளர் நிலையம் தெரிவித்தது.

இந்தத் தளத்தில் கூடுதலான இயக்கங்கள் இருந்தபோதிலும், சொந்தமாக நிதி திரட்டு முயற்சிகளைத் தொடங்கிய தனிநபர்கள் கடந்த ஆண்டு குறைவான நன்கொடைகளைப் பெற்றதாக நிலையம் கூறியது.

கடந்த ஆண்டு 2,400க்கும் அதிகமான இயக்கங்கள் மூலம் மொத்தம் $9.9 மில்லியன் திரட்டப்பட்டது. ஒப்புநோக்க, 2022ல் 1,800க்கும் அதிகமான இயக்கங்கள் மூலம் $10.8 மில்லியன் திரட்டப்பட்டது.

நன்கொடையாளர்கள், நன்கொடை தொகையின் அளவு குறைந்தது குறித்து விளக்கமளித்த நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி சோ, நன்கொடையாளர்கள் இணையப் பயன்பாடு இல்லாத நன்கொடை முறைக்கு மாறியிருக்கலாம் என்றார்.

கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வந்த பணவீக்கமும் வாழ்க்கைச் செலவினம் குறித்த கவலையும் நன்கொடை அளிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

நன்கொடையாளர்கள், நன்கொடைகள், நிதி திரட்டு இயக்கங்களின் எண்ணிக்கை கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பிருந்த நிலையைவிட தொடர்ந்து அதிகமாக இருந்து வருவதை திரு சோ சுட்டினார்.

தனிப்பட்ட நன்கொடையாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், ஒவ்வொரு நன்கொடையாளரின் சராசரி நன்கொடை கடந்த சில ஆண்டுகளாக நிலையாக அதிகரித்து வந்துள்ளதாக நிலையம் தெரிவித்தது.

2020ல் $530ஆக இருந்த நன்கொடை, கடந்த ஆண்டு $830ஆகக் கூடியது.

குறிப்புச் சொற்கள்