தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$1.7 மில்லியன் கோரி எஸ்ஐஏ மீது முன்னாள் விமானச் சிப்பந்தி வழக்கு

2 mins read
7adb0f0f-8081-4602-bd77-5cd91526a87d
2016 முதல் 2021 வரை எஸ்ஐஏவுக்கு பணியாற்றிய திரு துரைராஜ், வழக்கு விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையானார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சிப்பந்தி ஒருவர், விமானம் ஒன்றில் வழுக்கி கீழே விழுந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, $1.7 மில்லியனுக்கு மேல் கோரி அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.

2019 செப்டம்பர் 5ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஏ350 ரக விமானத்தில் திரு துரைராஜ் சந்திரன், 36, பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ஏறக்குறைய 17 மணி நேரம் நீடித்த பயணத்தில் அந்த விமானம் சிங்கப்பூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது தாம் கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில் அடிபட்டதாக திரு துரைராஜ் கூறினார்.

தமக்கு ‘செர்விகல் டிஸ்க் ப்ரோலேப்ஸ்’ எனும் உடல்நலப் பிரச்சினை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து S$1,775,662.49 தொகையை அவர் இழப்பீடு கோருகிறார்.

2016 முதல் 2021 வரை எஸ்ஐஏவுக்கு பணியாற்றிய திரு துரைராஜ், வழக்கு விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

பாதுகாப்பான வேலை முறையையும் பணிபுரிவதற்குப் பாதுகாப்பான வேலையிடத்தையும் வழங்க எஸ்ஐஏ தவறிவிட்டதாக திரு துரைராஜ் வாதிட்டார்.

“போதிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் தரையில் பசையுள்ள எண்ணெய்ப் பொருள் நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது பாதுகாப்பற்ற இடத்துக்குச் செல்வதைத் தடுத்திருக்கலாம்,” என்று ஈஸ்ட் ஏஷியா லா காப்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த திரு துரைராஜின் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

நிரு அண்ட் கோ எல்எல்சி சட்ட நிறுவனத்தால் பிரதிநிதிக்கப்பட்ட எஸ்ஐஏ, விமானத்தின் தரையில் பசையுள்ள எண்ணெய்ப் பொருள் இல்லை என்று வாதிட்டது. திரு துரைராஜ் வழுக்கி விழுந்திருந்தால், அவர் பசையுள்ள எண்ணெய்ப் பொருள் உள்ள தரையில் விழுந்திருக்க மாட்டார் என்று எஸ்ஐஏ கூறியது.

குறிப்புச் சொற்கள்