அமெரிக்காவுக்குச் சிறகடித்துப் பறந்து சென்ற அன்பர்கள்

இன்று அன்பர் தினம்.

உலகமெங்கும் காதலர்கள் மட்டுமன்றி குடும்பத்தாரும் நண்பர்களும் அவர்களுக்குப் பிடித்தமானவர்களுடன் கொண்டாடும் நாளாக அன்பர் தினம் கருதப்படுகிறது.

திருமணமான பிறகு முதல்முறையாக இவ்வாண்டின் அன்பர் தினத்தைக் கொண்டாடும் ஜோடி, அண்மையில் நிகழ்ந்த அவர்களின் தனித்துவமான கடலோரத் திருமண அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காதலர்கள், சிங்கப்பூருக்குத் திருமணமான தம்பதியராகத் திரும்பினர்.

28 வயதாகும் ஜாஸ்மின் ஸ்டீபன், அவரின் கணவர் அரவிந்த் கிளீட்டஸ், 30, இருவரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள சாண்டா பார்பரா நகரில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் மணமக்கள் உட்பட மொத்தம் 14 பேர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இன்று அன்பர் தினத்தை முன்னிட்டு கணவன் மனைவி இருவரும் பிரெஞ்சு உணவகத்துக்குச் சென்று நேரத்தைச் செலவிட ஆயத்தமாகிறார்கள்.

கடந்த மூன்றாண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள், திருமண வாழ்வில் இணைய முடிவெடுத்தபோது முதலில் தங்களுக்கென ஒரு வீடு வாங்கத் திட்டமிட்டனர்.

வீட்டிற்கு விண்ணப்பிக்கத் திருமணம் செய்திருக்க வேண்டும் என்பதால் அவர்கள் சில மாதங்களிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற அவசரத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.

உள்ளூரில் திருமண இடங்கள் பலவற்றைத் தேடியபோதும், அவை அவர்களின் ரசனைக்கேற்றவாறு அமையவில்லை.

சென்றாண்டு டிசம்பரில் அமெரிக்காவுக்குச் செல்ல பிப்ரவரி மாதத்திலேயே பயணச் சீட்டுகளை வாங்கியிருந்த இவர்கள், ஏன் அமெரிக்காவிலேயே திருமணம் செய்துகொள்ளக்கூடாது எனத் தங்கள் குடும்பத்தினரிடம் கேட்டனர்.

குடும்ப உறுப்பினர்களின் பலத்த ஆதரவுடன், திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. இணையாகப் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட இருவரும், அமெரிக்காவுக்குச் சென்றது இதுவே முதல் முறை.

இதர குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் முதல்முறையாக அமெரிக்கா சென்றதாகக் கூறிய ஜாஸ்மின், “அமெரிக்கா வரும்படி நாங்கள் எங்களுடைய நண்பர்களை வற்புறுத்தவில்லை. அனைவராலும் நாங்கள் கேட்டவுடன் வந்துவிட முடியாது. ஆனால், எங்கள் நெருங்கிய நண்பர்கள் எங்களுடன் பயணம் முழுவதும் கூடவே இருந்து ஆதரவு அளித்தனர்,” என்றார்.

சிங்கப்பூரர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் சென்று தங்களின் திருமணங்களை நடத்தியிருந்தாலும் தங்களைப் போல 15 மணி நேரம் கடல் தாண்டி இன்னொரு கண்டத்திற்குச் சென்று திருமணம் செய்து கொள்வது அரிது என்றார் அரவிந்த்.

“வழக்கமாக சிங்கப்பூரர்கள், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, இந்தியா போன்ற நாடுகளில் திருமணத்தை நடத்துவார்கள். நாங்கள் துணிச்சலுடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டோம். இந்த அனுபவத்திற்கு ஈடு எதுவுமில்லை,” என்று புன்னகையுடன் கூறினார் அவர்.

சிங்கப்பூரை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சியைத் திட்டமிடுவது பெருமளவில் மாறுபட்டது என்ற ஜாஸ்மின், “அமெரிக்காவில் பலர் திருமண ஒருங்கிணைப்பாளர்களை நாடுகின்றனர். அவர்களிடம் பணத்தைக் கொட்டித் தர விரும்பாமல் நானே திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டேன்,” என்றார்.

கலிஃபோர்னியா, அதன் கடலோர எழிலுக்குப் பெயர்பெற்றது. சாண்டா பார்பரா நகரைப் பற்றி இணையத்தில் அதிகம் அறிந்திருந்த ஜாஸ்மின், திருமணம் அங்குதான் நடக்க வேண்டுமென்று தீர்மானித்தார். அரவிந்தும் அதற்கு இணங்கினார்.

திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் இணையத்தின் உதவியுடன் கையாண்டார் ஜாஸ்மின். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் முதல் நாள் இறங்கிய அவர்கள் மூன்றாவது நாளிலே திருமணம் செய்து கொண்டனர்.

“திருமணத்தைத் தாமதப்படுத்த எங்களுக்கு விருப்பமில்லை. விரைவாகத் திருமணம் செய்து கொண்டதால்தான் எங்களால் நிம்மதியாக அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க முடிந்தது. இல்லையெனில் திருமணம் பற்றி யோசித்துக் கொண்டு மன உளைச்சலுடன் இருந்திருப்போம்,” என்றார் ஜாஸ்மின்.

சாண்டா பார்பரா நகரில் அமைந்துள்ள ‘சன்கன் கார்டன்ஸ்’ எனும் வளாகத்தில் அவர்களின் திருமணம் காலைவேளையில் இடம்பெற்றது.

தோட்டம், மலர்கள் மற்றும் வெள்ளை நிறக் கருப்பொருளுடன் திருமணம் இடம்பெற வேண்டுமென்று ஜாஸ்மின் முடிவெடுத்திருந்தார்.

மேலும், தங்களுடைய செல்லப்பிராணியான நாய்க்குட்டியை அமெரிக்காவிற்கு இருவரும் கூடவே கொண்டு சென்றிருந்தார்கள்.

இருவரும் மாற்றிக்கொள்வதற்கான மோதிரத்தை அவர்களுடைய நாய்க்குட்டிதான் கொண்டு வந்தது. அந்தக் காணொளிகள் அவர்களின் சமூக ஊடகத் தளங்களில் பகிரப்பட்டிருந்தன.

திருமணச் செலவு மட்டும் 25,000 சிங்கப்பூர் டாலர் எனப் பகிர்ந்துகொண்ட ஜாஸ்மின், “திருமண நிகழ்ச்சியைவிட, எங்கள் பெற்றோர்களுக்கு எவ்வித சுமையையும் அளிக்காமல் நாங்கள் இந்தப் பயணத்தைச் சுமுகமாகத் திட்டமிட்டிருந்தோம்.

“என் அப்பா திருமண ஏற்பாடுகளுக்கு உதவ முன்வந்தபோதும் நான் அதை நிராகரித்து விட்டேன். குடும்பத்தினர் பயணத்தில் இன்பம் காண வேண்டுமென்பதே எனக்கும் அரவிந்துக்கும் குறிக்கோளாக இருந்தது,” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் மொத்தம் இரண்டரை வாரங்கள் கழித்த அவர்கள், அங்கு புகழ்பெற்ற இடங்களான லாஸ் வேகஸ், மாலிபு, ஹாலிவுட் ஆகிய இடங்களைச் சுற்றி பார்த்து பிரமித்தனர்.

சிங்கப்பூர் திரும்பும்முன் நியூயார்க் சென்றிருந்த அவர்கள், தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை அளித்திருந்தனர்.

நியூயார்க் நகரின் சின்னமாக விளங்கும் டைம்ஸ் ஸ்குவேரில் இருக்கும் விளம்பரப் பலகையொன்றில் தம்பதியின் திருமணக் காணொளி காட்டப்பட்டது.

அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்த தம்பதியர், “இவ்வளவு தூரம் செல்லும்போது, நாங்கள் ஏன் விளம்பரப் பலகையில் எங்கள் காணொளியைக் காட்சிப்படுத்தக்கூடாது என்று நினைத்தோம்.

“அதற்கான செலவு அமெரிக்க டாலர் 40 மட்டுமே. பலர் நாங்கள் அதற்கு அதிக பணம் செலவு செய்திருப்போம் என்று நினைத்துக் கேள்வி கேட்கத் தொடங்கினர்,” என்றனர்.

திருமணம், கிறிஸ்துமஸ், இருவரின் பிறந்தநாள்கள் என நான்கையும் அமெரிக்காவில் கொண்டாடிய மகிழ்வில் திளைக்கும் அவர்கள், “எங்களது அமெரிக்கக் கனவு நனவானது. ஊடகங்களில் காண்பிப்பது போல அமெரிக்கா ஆபத்தான நாடல்ல. அமெரிக்கர்கள் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர்கள்.

“வாய்ப்பு கிடைத்தால் இதர மாநிலங்களைப் பார்க்கவோ சிறிது காலம் வேலை செய்யவோ நாங்கள் கண்டிப்பாக அமெரிக்கா செல்வோம்,” என்று சொன்னார்கள்.

எதிர்வரும் கோடைக்கால விடுமுறையில் தேனிலவுக்காக ஐரோப்பா செல்லத் திட்டமிடும் இத்தம்பதி, “திருமணம் செய்துகொள்ள விரும்புவோர் கடல் தாண்டி மற்ற நாடுகளில் திருமணம் செய்ய அஞ்ச வேண்டாம்.

“உலகின் எழில்மிக்க இடங்களுக்குச் சென்று உங்கள் கனவை நனவாக்குங்கள். குறைகூறல்கள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாதீர்கள்,” என்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!