இணைய விளையாட்டில் கொடுமைப்படுத்தல்: 17% இளையர்கள் கருத்து

2 mins read
0b6fcc23-58ec-4b41-8049-09f947a753bf
தங்கள் பிள்ளைகளின் விளையாட்டுப் பழக்கங்கள் குறித்து கவலையுறும் பெற்றோர் நேரக் கட்டுப்பாடு விதிக்க அதிக சாத்தியம் உண்டு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பதின்மூன்று வயதுக்கும் பதினெட்டு வயதுக்கும் இடைப்பட்ட இணைய விளையாட்டாளர்களில் ஐந்தில் ஒருவர், இதர விளையாட்டாளர்களால் தாம் கொடுமைப்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர்.

இளையர் சம்பந்தப்பட்ட இணைய விளையாட்டுடன் தொடர்புடைய முதல் ஆய்வில் இது தெரிய வருகிறது.

கொடுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்த 17 விழுக்காட்டு விளையாட்டாளர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர், இணைய விளையாட்டின்போது கொடுமைப்படுத்தப்பட்டதை தங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்தவில்லை.

தங்கள் பிள்ளைகள் யாருடன் விளையாடுகின்றனர் என்பது பற்றி பெற்றோரில் பெரும்பாலானோருக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

பத்து வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட இணைய விளையாட்டாளர்களில் 14 விழுக்காட்டினரால் இணைய விளையாட்டிற்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைக் கண்டறிய முடியவில்லை.

இணையத்தில் தாங்கள் சந்தித்தவர்களுடன் தங்கள் தனிப்பட்ட விவரங்களை அவர்கள் பகிர்ந்தனர்.

முதல்முறையாக நடத்தப்பட்ட இணைய விளையாட்டு குறித்து ஆய்வு முடிவுகளை தொடர்பு, தகவல் அமைச்சு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

தங்கள் பிள்ளைகளின் இணைய நடவடிக்கைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துமாறு பெற்றோரிடம் அமைச்சு வலியுறுத்தியது. பெற்றோருக்கு உதவ தேவையான வளங்களை அமைச்சு படிப்படியாக அறிமுகம் செய்யும்.

2022 முதல் 2023 வரை வீடு வீடாக சென்று நடத்தப்பட்ட இந்த ஆய்வு, 10 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 810 சிங்கப்பூர் இளையர்களையும் அவர்களுடைய பெற்றோரையும் ஆய்வுக்கு உட்படுத்தியதாக அமைச்சு குறிப்பிட்டது.

பத்து வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட விளையாட்டாளர்களிடம் சில கேள்விகள் முன்வைக்கப்படவில்லை.

விளையாட்டாளர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் தினமும் இணைய விளையாட்டில் ஈடுபட்டதை ஆய்வு கண்டறிந்தது. ஒவ்வோர் அமர்விலும் அவர்கள் இரண்டு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக ஈடுபட்டனர்.

தங்கள் பிள்ளைகளின் விளையாட்டுப் பழக்கங்கள் குறித்து கவலையுறும் பெற்றோர் நேரக் கட்டுப்பாடு விதிக்க அதிக சாத்தியம் உண்டு.

தங்கள் பிள்ளைகளின் மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டைச் சமாளிக்க உதவ பெற்றோருக்கான வழிகாட்டிகள் படிப்படியாக வெளியிடப்படும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்