கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட போதைப் பித்தர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் உட்கொள்ளும் பெண்கள், இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்பட்டன.
2022ஆம் ஆண்டில் 2,826 போதைப் பித்தர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 10 விழுக்காடு அதிகரித்து 3,101ஆகப் பதிவானது.
கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட போதைப் பித்தர்களில் 944 பேர் அந்தப் பழக்கத்துக்குப் புதிதாக அடிமையானவர்கள்.
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 18 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைவானவர்கள். அவர்களில் ஐவர் 14 வயது சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இவர்களே கைது செய்யப்பட்ட ஆக இளையவர்கள்.
“இளையர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்திருப்பது கவலைக்குரியது. போதைப் பொருள் உட்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது,” என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் இயக்குநர் சேம் டீ தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டில் 408 பெண் போதைப் பித்தர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 454ஆக அதிகரித்தது.
போதைப் பழக்கத்துக்குப் புதிதாக அடிமையானவர்களில் 182 பேர் பெண்கள்.
இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 171ஆக இருந்தது.
கஞ்சாவுக்கு அடிமையாகி கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகள் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 17 விழுக்காடு அதிகரித்து 277ஆகப் பதிவானது.
“உலகளாவிய நிலையில் போதைப்பொருளால் ஏற்படும் பிரச்சினைகள் மோசமடைந்துள்ளன. கூடுதல் போதைப்பொருள் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன், போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பல நாடுகளில் கடுமையானதாக இல்லை,” என்று திரு டீ கூறினார்.