தவறுதலாக வசூலிக்கப்பட்ட பொருள், சேவை வரி பொதுமக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும்

தவறுதலாக வசூலிக்கப்பட்ட பொருள், சேவை வரி பொதுமக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும்

2 mins read
75470227-dc76-4c56-8819-9e01c74c30c0
சம்பந்தப்பட்ட 18 ஒழுங்குமுறை கட்டணங்களுக்குப் பொருள், சேவை வரி வசூலிப்பதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்

கடந்த ஐந்து ஆண்டுகளில் தவறுதலாக ஏறத்தாழ $7.5 மில்லியன் பெறுமானமுள்ள பொருள், சேவை வரி வசூலிக்கப்பட்டது என்றும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் அவற்றைப் பொதுமக்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடும் என்றும் புதன்கிழமை (பிப்ரவரி 14) தெரிவிக்கப்பட்டது.

தவறுதலாக வசூலிக்கப்பட்ட பொருள், சேவை வரி தொகையுடன் ஒவ்வோர் ஆண்டுக்கும் 5.5 விழுக்காடு வட்டியும் சேர்த்து பாதிக்கப்பட்டோருக்குத் திருப்பிக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தவறுதலாக வசூலிக்கப்பட்ட பொருள், சேவை வரியைத் திருப்பிக் கொடுக்கும் பணி இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும்.

18 ஒழுங்குமுறை சேவைகளுக்கான கட்டணங்களை செயலாக்கக் கட்டணங்களாகத் தவறாகக் கருதி சொத்து முகவைகளுக்கான மன்றம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் உணவு அமைப்பு, நகர மறுசீரமைப்பு ஆணையம், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின்கீழ் செயல்படும் பொது காப்பாளர் அலுவலகம் ஆகிய ஆறு அமைப்புகள் தவறுதலாகப் பொருள், சேவை வரி வசூலித்ததாகத் தெரியவந்துள்ளது.

இதன் விளைவாக அந்த 18 ஒழுங்குமுறை கட்டணங்களை தனிநபர்களும் வர்த்தகங்களும் செலுத்தியபோது பொருள், சேவை வரியும் வசூலிக்கப்பட்டது.

உதாரணத்துக்கு, சொத்து முகவர் உரிமத்தைப் புதுப்பித்தபோது, உணவுத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்த விண்ணப்பம் செய்தபோது, வீவக வீட்டை அல்லது அறையை வாடகைக்கு விட்டபோது, நீண்டகால அதிகாரப் பத்திரத்துக்குப் பதிவு செய்தபோது பொருள், சேவை வரி வசூலிக்கப்பட்டது.

பிப்ரவரி 14ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஒழுங்குமுறை கட்டணங்களுக்குப் பொருள், சேவை வரி வசூலிப்பதை உடனடியாக நிறுத்த இந்த அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருள், சேவை வரி தவறுதலாக வசூலிக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட ஆறு அமைப்புகளும் நிதி அமைச்சும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக நிதி அமைச்சின் இரண்டாம் நிரந்தரச் செயலாளர் லாய் வெய் லின் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்