ஜோகூரில் சாலை வன்முறை: சிங்கப்பூரருக்கு $1,545 அபராதம்

ஜோகூரில் சாலை வன்முறை: சிங்கப்பூரருக்கு $1,545 அபராதம்

1 mins read
59231696-3f00-4cf6-be37-89ab65955f73
45 வயது சோ கியான் ஹெய் சிங்கப்பூரில் டாக்சி ஓட்டுநராக உள்ளார். - படம்: தி ஸ்டார்

மலேசியாவின் வடக்கு-கிழக்கு விரைவுச்சாலையில் வடக்கே சென்றுகொண்டிருந்தபோது சாலை வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சோ கியான் ஹெய் என்னும் சிங்கப்பூரருக்கு 1,545 வெள்ளி (5,500 ரிங்கிட்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது 45 வயது சோ தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

பிப்ரவரி 10ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் சோ முவார் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் சென்ற கொண்டிருந்த நபருக்கும் சோவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சோ தன் முன் நின்றுகொண்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்தார். அது குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

அதைத்தொடர்ந்து ஜோகூர் காவல்துறை அதிகாரிகள் சம்பவத்தை விசாரித்தனர். அதன் பின்னர் சோ அடையாளம் காணப்பட்டு பாகாங்கின் கெந்திங் மலையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 12) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

சோ சிங்கப்பூரில் டாக்சி ஓட்டுநராக உள்ளார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன. காரின் கண்ணாடியை உடைத்ததால் 2,500 ரிங்கிட் சேதம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சோ அபராதம் செலுத்தவில்லை என்றால் 12 மாதம் சிறைத் தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. சோ அபராதத்தை செலுத்திவிட்டு நீதிமன்றத்தில் வெளியேறியதாக தி ஸ்டார் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்