சுற்றுக்காவல் படகிலிருந்து 100 லிட்டர் பெட்ரோல் திருடிய நால்வருக்கு சிறை

சுற்றுக்காவல் படகிலிருந்து 100 லிட்டர் பெட்ரோல் திருடிய நால்வருக்கு சிறை

1 mins read
d913bfb9-0544-4643-a961-3d94fdfe26ca
தண்டிக்கப்பட்ட நால்வரும் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். - கோப்புப் படம்: இணையம்

காவல்துறையின் கடலோரக் காவற்படைக்குச் சொந்தமான சுற்றுக்காவல் படகில் இருந்து 100 லிட்டர் பெட்ரோலை திருடிய நான்கு ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அல்டன் டியோ சீ கியட், 32, முஹம்மது கைருல்லா அப்துல்லா, 31, முஹம்மது ரிஸுவான் லேமன், 34, முஹம்மது ஷாஸ்வான் ஹிஸாம், 33, ஆகிய அந்த நான்கு ஆடவர்களும் ஒரே நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர்கள்.

அவர்கள் அனைவரும் புதன்கிழமை (பிப்ரவரி 14) பெட்ரோல் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

டியோவுக்கு மூன்று வாரம் சிறை, ரிஸுவான் மற்றும் ஷாஸ்வானுக்கு தலா ஒரு மாதம் சிறை, கைருல்லாவுக்கு ஒரு மாதம், ஒரு வாரம் சிறை என அவரவர் புரிந்த குற்றத்திற்கு ஏற்ப தண்டனை விதிக்கப்பட்டது.

லிம் சு காங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுக்காவல் படகில் இருந்து ஏறக்குறைய 100 லிட்டர் பெட்ரோலை நால்வரும் ஒன்றுசேர்ந்து திருடினர். அதன் மதிப்பு $183.04. 2023 ஜூலை மாதம் நான்கு நாள்கள் அந்தத் திருட்டு நடைபெற்றது.

தண்டிக்கப்பட்டவர்கள், திருடிய பெட்ரோலின் மதிப்புக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, டியோ $45.76, ரிஸுவான் மற்றும் ஷாஸ்வான் தலா $54.91, கைருல்லா $101.65 தொகையை இழப்பீடாக வழங்கவேண்டும்.

குறிப்புச் சொற்கள்