தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிடிசி பற்றுச்சீட்டுகள் மூலம் பொருளியலுக்கு $312.8 மில்லியன் பங்களிப்பு

2 mins read
6f38ca8f-96c1-40fc-be8d-1d3ae861e763
முதந்முறையாக 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் சமூக மேம்பாட்டு மன்றத்தின் (சிடிசி) பற்றுச்சீட்டுத் திட்டங்களால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வர்த்தகங்களும் உணவங்காடி நிலையங்களும் பயன்பெற்றுள்ளன.

அதிகரித்து வரும் செலவுகளைச் சிங்கப்பூர் குடும்பங்கள் சமாளிக்கும் நோக்கத்தில் சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

ஈராண்டுகளில் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகள் சிங்கப்பூர் பொருளியலுக்கு 312.8 மில்லியன் வெள்ளி வரை பங்காற்றி இருக்கலாம் என்று சிங்கப்பூர் பொருளியல் மதிப்பாய்வு தெரிவித்துள்ளது. அது நடத்திய ஆய்வு மூலம் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

அந்த 312.8 மில்லியன் வெள்ளியில் 237.9 மில்லியன் வெள்ளியை குடும்பங்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 312.8 மில்லியன் வெள்ளி என்பது சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.05 விழுக்காடாகும்.

ஆய்வில் கலந்து கொண்ட வர்த்தகங்கள், உணவங்காடி நிலையங்களில் 80 விழுக்காட்டினர் 1,000 வெள்ளிக்கு மேல் சிடிசி பற்றுச்சீட்டு பரிமாற்றங்களைப் பெற்றுள்ளனர். 30 விழுக்காட்டினர் 10,000 வெள்ளிக்கு மேல் சிடிசி பற்றுச்சீட்டு பரிமாற்றங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முதன்முறையாக, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. கொவிட்-19 தொற்றுப் பரவல் காலகட்டத்தில் சிங்கப்பூரர்களும் உள்ளூர் வர்த்தகர்களும் பாதிக்கப்படாமல் இருக்க அவை உதவின.

பின்னர் 2022ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாவது முறையாக சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் நோக்கத்துடன் அவை வழங்கப்பட்டன.

அவ்விரு பற்றுச்சீட்டு நடவடிக்கைகள் மூலமும், ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பமும் தலா 200 வெள்ளி மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பெறத் தகுதிபெற்றிருந்தன.

கடந்த 2022 டிசம்பர் மாத நிலவரப்படி குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கிட்டத்தட்ட 20,000 வர்த்தகங்கள் சிடிசி பற்றுச்சீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.

தகுதிபெற்ற 1.22 மில்லியன் சிங்கப்பூர்க் குடும்பங்களில் 96 விழுக்காட்டுக்கும் அதிகமான குடும்பங்கள் தங்களுக்கு கிடைத்த சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்