தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குதல்’ எனும் கருப்பொருளில் வரவுசெலவுத் திட்டம்

2 mins read
0e2cc024-65de-4424-a524-2c13178e1534
‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தில் வரையப்பட்டுள்ள திட்டங்களில் முதலாவதாக வரவுசெலவுத் திட்டம் அமைகிறது என்றார் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: லாரன்ஸ் வோங்/ஃபேஸ்புக்

‘நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குதல்’ எனும் கருப்பொருளில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (16 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவுள்ளார்.

சிங்கப்பூர் குடிமக்கள் தங்கள் முழு ஆற்றலை எட்ட அரசாங்கத்தின் திட்டங்கள் உரையின்போது அறிவிக்கப்படும்.

அதேவேளையில், பிரச்சினையுடைய உலகில் சிங்கப்பூரர்களுக்கு உத்தரவாதம் அளிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று திரு வோங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தில் வரையப்பட்டுள்ள திட்டங்களில் முதலாவதாக வரவுசெலவுத் திட்டம் அமைகிறது என்றார் நிதி அமைச்சருமான திரு வோங்.

நான்காம் தலைமுறைத் தலைமைத்துவத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்ட அறிக்கை கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது. மாற்றங்கள் நிலவிவரும் சூழலில் ஒன்றுபட்டு இருப்பதற்கு வரும் ஆண்டுகளில் சிங்கப்பூர் முன்னெடுக்கவுள்ள முயற்சிகளை 180 பக்கங்கள் கொண்ட அத்திட்டம் பட்டியலிட்டது.

வசதிகுறைந்தவர்கள், பணியிடைக்கால ஊழியர்கள், மூத்தோர் ஆகிய பிரிவினருக்கு உதவிக்கரம் நீட்டுவது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

தமது சமூக ஊடகத் தளத்தில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையின் கருப்பொருளை அறிவித்த திரு வோங், “சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்வதற்கும் குடிமக்கள் அவர்களது முழு ஆற்றலை எட்டுவதற்கும் பிரச்சினையுடைய உலகில் குடும்பங்களுக்கும் மூத்தோருக்கும் கூடுதல் உத்தரவாதம் தருவதற்குமான வரவுசெலவுத் திட்டம் இது,” என்று விவரித்தார்.

திரு வோங் தலைமையில் மக்களை ஈடுபடுத்தும் தேசிய அளவிலான நடவடிக்கைக்குப் பிறகு முன்னேறும் சிங்கப்பூர் திட்டம் தொடங்கப்பட்டது. 2022 ஜூன் மாதம் அந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து 200,000க்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் அதில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிங்கப்பூரின் சமுதாய ஒற்றுமையைப் புதுப்பிக்கும் நோக்கில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கல்வி, ஓய்வுக்காலம், சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு உட்பட வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சிங்கப்பூரர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படுவதை உறுதிசெய்ய அது முற்பட்டது.

வரவுசெலவுத் திட்ட அறிக்கை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒலி, ஒளிபரப்பப்படும் என்று நிதி அமைச்சு டிசம்பரில் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்பட்ஜெட் 2024