பேருந்துச் சேவைகள் மாற்றியமைக்கப்படும்போது பயணிகளின் பயணப் போக்கு, ஒட்டுமொத்த இணைப்பு, பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பின் மீள்திறன் முதலியவை பரிசீலிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
பிப்ரவரி 16ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் இதுகுறித்து அமைச்சர் சீ பேசினார்.
பேருந்துச் சேவைகள் மாற்றியமைக்கப்படுவது, தக்கவைத்துக்கொள்வது ஆகியவை குறித்தும் அவை தொடர்பான பரிசீலனைகள் குறித்தும் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரல்ட் கியாம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சீயின் உரை அமைந்தது.
பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் பயணிகளுக்கான சௌகரியமும் பயணிகள் மற்றும் வரி செலுத்துபவர்களின் ஒட்டுமொத்த செலவினத்தைக் கட்டுப்படியான விலையில் வைத்திருப்பதும் முக்கியம் என்றார் திரு சீ.
புதிய எம்ஆர்டி ரயில் பயணப் பாதைகளில் சேவை வழங்கும் சில பேருந்துகளின் பயணப் பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் அதன் விளைவாக அந்தப் பேருந்துகளின் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதாகவும் அமைச்சர் சீ தெரிவித்தார்.
ஆனால் ஒரே பயணப் பாதையில் எம்ஆர்டி ரயில்களும் பேருந்துகளும் சேவையாற்றும்போது கூடுதல் செலவினம் ஏற்படுவதாக அவர் கூறினார்.
ஒரு சில பயணிகளின் சௌகரியத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஒட்டுமொத்த அளவில் அனைத்துப் பயணிகளின் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்க காரணமாக இருப்பது சரியன்று என்றார் அமைச்சர் சீ.
பேருந்து இணைப்பு, சேவைகள் ஆகியவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து குடியிருப்பாளர்களிடம் நிலப் போக்குவரத்து ஆணையம் தொடர்ந்து கருத்து சேகரிக்கும் என்று அமைச்சர் சீ கூறினார்.