பாலர் பள்ளிக் கட்டணம் குறைகிறது; உடற்குறையுள்ளோருக்கு கூடுதல் உதவி

அரசாங்க ஆதரவு பெற்ற பாலர் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர் 2025 முதல் குறைந்த கட்டணம் செலுத்துவார்கள்.

வேலை செய்யாத தாய்மார்களைக்கொண்ட குறைந்த வருமானக் குடும்பங்கள் கூடுதல் பாலர் பள்ளி மானியங்களைப் பெறுவார்கள்.

பாலர் பள்ளி படிப்பைக் கட்டுப்படியானதாக்க, முழுநாள் குழந்தைப் பராமரிப்புக்கான கட்டண உச்சவரம்பு ஒரு மாதத்திற்கு $40 குறைந்து முதன்மை நிறுவனக் கட்டணம் $640 ஆகவும், பங்காளி நிறுவனக் கட்டணம் $680 ஆகவும் 2025ல் குறையும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பிப்ரவரி 16 அன்று கூறினார்.

வரும் 2026ல் மீண்டும் கட்டணம் குறைக்கப்படும் என்று கூறிய அவர், அதுகுறித்த விவரங்கள் பின்னொரு தேதியில் அறிவிக்கப்படும் என்றார்.

கட்டணம் குறைக்கப்படுவதால், இரட்டை வருமானக் குடும்பங்களுக்கான முழு நாள் பாலர் பள்ளி செலவு, தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிக்குப் பிந்திய மாணவர் பராமரிப்புக்கான செலவுடன் ஒத்ததாக இருக்கும் என்று திரு வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் கூறினார்.

தற்போது ஐந்து முதன்மை நிறுவனங்களும், 28 பங்காளி நிறுவனங்களும் உள்ளன. ஆங்கிலிக்கன் பாலர் கல்வி சேவைகள், லிட்டில் ஸ்கூல் ஹவுஸ் உள்ளிட்ட மொத்தம் 333 மையங்களை பங்காளி நிறுவனங்கள் நடத்துகின்றன.

முதன்மை நிறுவனங்களும் பங்காளி நிறுவனங்களும் அரசாங்க நிதியைப் பெறுவதுடன், கட்டணங்களைக் கட்டுப்படியானதாக வைத்துள்ளன.

வேலை செய்யாத தாய்மார்களைக் கொண்ட குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பாலர் பள்ளி மானியங்கள் அதிகரிக்கப்படுகிறது. வேலை செய்யும் தாய்மார்கள் பெறும் மானியங்களை அவர்களும் பெறுவார்கள் என்று திரு வோங் கூறினார். இது கிட்டத்தட்ட 17,000 குழந்தைகளுக்கு பயனளிக்கும் என்றார் அவர்.

தற்போது, வேலைக்குச் செல்லும் தாய்மார்களைக்கொண்ட குழந்தைகளுக்கு அதிக மானியங்கள் வழங்கப்படுகின்றன என்று திரு வோங் குறிப்பிட்டார்.

பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு அடிப்படை குழந்தைப் பராமரிப்பு மானியமாக $300 வழங்குகிறது. வேலைக்குப் போகாத தாய்மாருக்கு $150 கிடைக்கிறது.

குடும்பத்தின் மொத்த மாத வருமானம் $12,000 மற்றும் அதற்கும் குறைவாக உள்ள குறைந்த வருமானம் ஈட்டும் வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்குக் கூடுதலாக $467 வரை குழந்தைப் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகிறது. வேலை செய்யாத தாய்மார்கள் தற்போது கூடுதல் மானியத்திற்குத் தகுதி பெறுவதில்லை.

இளம் குடும்பங்களுக்கு கூடுதல் உதவி, அதிகமான இடைக்கால வாடகை வீடுகள்

குடும்பம் அமைக்கத் தயாராக இருக்கும் இளம் தம்பதிகளுக்கு உதவ, அரசாங்கம் பிள்ளைப்பேற்றுக்கான இடைக்கால குடியிருப்புத் திட்ட (பிபிஎச்எஸ்) பற்றுச்சீட்டை வழங்கும். இதனால், தேவைக்கேற்ப கட்டப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (பிடிஓ) வீட்டுக்குக் காத்திருக்கும் தகுதியுள்ள குடும்பங்கள் பொதுச் சந்தையில் வீவக வீட்டை வாடகைக்கு எடுக்க முடியும் என்று திரு வோங் கூறினார். பற்றுச்சீட்டு ஓராண்டுக்குக் கிடைக்கும்.

பிபிஎச்எஸ் திட்டம், $7,000 அல்லது அதற்கும் குறைவான மாதாந்தர குடும்ப வருமானம் கொண்ட, கட்டி முடிக்கப்படாத வீவக வீட்டைக் கொண்ட குடும்பங்களுக்கு இடைக்கால வாடகை வீடுகளை வழங்குகிறது.

“வீவக பிபிஎச்எசுக்கு ஏராளமான விண்ணப்பங்களைப் பெறுகிறது. தேவையை பூர்த்தி செய்ய விநியோகத்தை அதிகரித்து வருகிறது. இடைக்காலத்தில் அவசரமான வீட்டுத் தேவைகளைக் கொண்ட அத்தகைய இளம் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அதிகம் செய்ய விரும்புகிறோம், ” என்று கூறிய நிதியமைச்சர், குறிப்பாக இளம் பிள்ளைகளைக் கொண்டவர்களுக்கு இது பொருந்தும் என்றார்.

தற்போது, வீவக இத்திட்டத்தின் கீழ் சுமார் 2,000 இடைக்கால வாடகை வீடுகளைக் கொண்டுள்ளது. 2025ன் பிற்பாதியில் தங்ளின் ஹால்டில் காலியாக உள்ள மேலும் 2,000 வீடுகள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

தேவைக்கேற்பக் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளின் விநியோகம் அதிகரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட துணையமைச்சர் வோங், முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் திட்டங்கள் உள்ளன என்றும் சொன்னார்.

கணிக்க முடியாத எதிர்காலத்தில் தாக்குப்பிடிக்க குழந்தைகளுக்கு உதவும் வகையில், கல்வி அமைச்சு சூழலுக்கு ஏற்றவாறு சரிசெய்துகொள்கிற, புத்தாக்க வழிகளில் சிந்திக்கும் திறன், தொடர்பு, குடிமை கல்வியறிவு போன்ற திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்று துணைப் பிரதமர் கூறினார்.

இத்தகைய திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்களை அங்கீகரிக்கவும், பிற முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் எடுசேவ் அறக்கட்டளை நிதியில் அரசாங்கம் 2 பில்லியன் வெள்ளியை நிரப்பும் என்று அவர் குறிப்பிட்டார்.

உடற்குறையுள்ளோருக்கு கூடுதல் உதவி

சிறப்புத் தேவைகள் அல்லது உடற்குறை உள்ளவர்களின் குடும்பங்களுக்கு உதவ, சிறப்புக் கல்விப் பள்ளிக்கான (ஸ்பெட்) அதிகபட்ச மாதக் கட்டணம் $150லிருந்து $90க்குக் குறைக்கப்படுகிறது.

குடும்பங்களின் செலவுகளைக் குறைப்பதற்காக அனைத்து சிறப்புத் தேவையுடைய மாணவர் பராமரிப்பு நிலையக் கட்டணங்களின் உச்சவரம்பும் குறைக்கப்படுகிறது.

சிறப்புப் பள்ளி மாணவர்கள் ஏற்கெனவே பிரதான பள்ளிகளில் உள்ளவர்களைவிட அதிக மானியங்களைப் பெற்றாலும், கூடுதலான அடிப்படைச் செலவுகள் காரணமாக பெரும்பாலான அத்தகைய பள்ளிகளில் கட்டணம் அதிகமாக உள்ளது என்று திரு வோங் குறிப்பிட்டார்.

உடற்குறையுள்ள உள்ள பெரியவர்கள் சமூகத்துடன் ஒருங்கிணையவும், வேலை தேட உதவவும் கூரையுடன் கூடிய பட்டறைகள், பகல்நேர நடவடிக்கை நிலையங்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் இதனால் அவர்கள் திறன் பயிற்சி பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

பொது வேலைச் சந்தையில் வேலை பெறுவதற்கான தகுதியோ, திறன்களோ கொண்டிராத உடற்குறையுள்ளோர் கொண்ட பெரியவர்களுக்கு, கூரையுடன் கூடிய பட்டறைகள் வேலைவாய்ப்பு அல்லது தொழிற்பயிற்சி வழங்குகிறது, அதே நேரத்தில் பகல்நேர நடவடிக்கை நிலையங்கள் பராமரிப்பு, திறன் பயிற்சியை வழங்குகிறது.

உடற்குறை உள்ளவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் சமூக ஆதரவை வழங்குவதற்காக மேலும் பல சேவை மையங்களும் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த 2023ல் தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தில் திறக்கப்பட்ட முதல் மையம், உடற்குறையுள்ளோருக்கான நடவடிக்கைகள் மற்றும் கற்றல் படிப்புகளை வழங்குகிறது.

இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் பின்னர் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதங்களின் போது நாடாளுமன்றத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் என்று திரு வோங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!