$1.9 பி. உதவி: உத்தரவாதத் தொகுப்பு திட்டம் மேம்பாடு

$1.9 பி. உதவி: உத்தரவாதத் தொகுப்பு திட்டம் மேம்பாடு

கூடுதலாக $600 சிடிசி பற்றுச்சீட்டுகள்
1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Feb 2024 - 8:37 pm

2 mins read

சிங்கப்பூரர்கள் தங்களது வாழ்க்கைச் செலவினத்தையும் நிச்சயமற்ற பொருளியல் சூழலையும் சமாளிக்கும் வகையில் உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

ரொக்கம், பற்றுச்சீட்டுகள் மற்றும் கட்டணக் கழிவுகள் என பல்வேறு உதவிகளுக்காக $1.9 பில்லியன் நிதி ஒதுக்கப்படுகிறது.

குறைந்த வருமானக் குடும்பங்களையும் பெரிய குடும்பங்களையும் அதிகம் ஆதரிக்கும் வண்ணம் உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, மூத்தோரும் குழந்தைகளும் உள்ள குடும்பங்களுக்கு இத்திட்டம் அதிக பலனளிக்கும்.

ஏறக்குறைய 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு $600 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

இது இரு பகுதிகளாக வழங்கப்படும்.

முதற்கட்டமாக, $300 பற்றுச்சீட்டுகள் இவ்வாண்டு ஜூன் மாத இறுதியிலும் மற்றுமொரு $300 பற்றுச்சீட்டுகள் 2025 ஜனவரியிலும் வழங்கப்படும் என திரு வோங் அறிவித்தார்.

இவ்வாண்டில் வழங்கப்பட்டதுபோல, இந்தப் புதிய பற்றுச்சீட்டுகளையும் பேரங்காடிகளிலும் குடியிருப்பு வட்டாரக் கடைகள் மற்றும் உணவங்காடி நிலையங்களிலும் சரிபாதியாகச் செலவிடலாம்.

இவை தவிர, இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தகுதி உள்ள சிங்கப்பூரர்களுக்கு வாழ்க்கைச் செலவின சமாளிப்பு சிறப்புத் தொகையாக $200 முதல் $400 வரை ரொக்கம் வழங்கப்படும்.

இதற்குத் தகுதிபெற, இவ்வாண்டில் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரராக இருப்பதுடன் சிங்கப்பூரில் வசிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்குச் சொந்தக்காராக இருக்கக்கூடாது. கணக்கீட்டு வருமானம் $100,000 வரை இருக்கலாம். இத்தகைய தகுதிபெறும் 2.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ரொக்கம் கிடைக்கும்.

மேலும், 2025 ஜனவரியில் ஒருமுறைக்கான சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவு வழங்கப்படும். 950,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர் குடும்பங்களின் சேவை பராமரிப்புக் கட்டணத்தில் 0.5 மாதக் கட்டணம் கழித்துக்கொள்ளப்படும்.

வழக்கமான சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவுகளுடன் வீடுமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் தகுதியுள்ள குடும்பங்கள் இந்த நிதி ஆண்டில் அதுபோன்ற கட்டணக் கழிவுகளை நான்கு மாதங்கள் வரை பெறும். கூடுதலாக வழங்கப்படும் ஒருமுறை கட்டணக் கழிவு, அதிகரிக்கும் பயனீட்டுக் கட்டணங்களைச் சமாளிக்க, வீவக வீடுகளில் வசிக்கும் 950,000 சிங்கப்பூரர் குடும்பங்களுக்கு உதவும்.

தகுதி உள்ள குடும்பங்கள் வழக்கமான யு-சேவ் கட்டணக் கழிவுகளைப் போல 2.5 மடங்கு அல்லது $950 வரை இந்த நிதி ஆண்டில் பெறும். மூவறை மற்றும் நான்கறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் பயனீட்டுக் கட்டணங்களை நான்கு மாதங்களுக்குச் சமாளிக்கும் வகையில் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் 2025 ஜனவரியில் இந்தக் கழிவுகள் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்