பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கரிம வெளியீட்டை குறைத்தது அதுபோல் அவர்களது விநியோகிப்பாளர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளன.
இந்தச் சூழலில் உள்ளூர் நிறுவனங்களும் நீடித்த நிலைத்தன்மையைக் கடைப்பிடித்து முன்னேற்றம் காணலாம்.
இதனால்தான் உள்ளூர் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பசுமைத் தீர்வுகளை மேற்கொள்ள அதிக ஆதரவு வழங்கப்படும் என்று வெள்ளிக்கிழமை தனது வரவுசெலவு திட்ட உரையில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
“தற்போதைய நிலையில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சில சமயங்களில் நீடித்த நிலைத்தன்மையை கூடுதல் சுமையாகவும், செலவாகவும் கருதலாம். ஆனால், பசுமைத் தீர்வுகளை கையிலெடுத்தல் போட்டித்தன்மையை உயர்த்தும் விதமாக பலனைத் தரலாம்,” என்று அவர் விளக்கினார்.
இதன் தொடர்பில் ‘இஎஃப்எஸ்’ எனப்படும் நிறுவன நிதியுதவித் திட்டத்தில் மூன்று மேம்பாடுகளை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தனது வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவித்தார். இதன்மூலம், சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்களது அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் நிதியுதவியை எளிதில் பெறலாம் என்று அவர் கூறினார்.
முதலாவதாக, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவைப்படும் அன்றாட நடப்பு மூலதனக் கடன் வரம்பு $300,000லிருந்து $500,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, இந்த நிறுவனங்களுக்கான வர்த்தகக் கடன் உதவித் திட்டத்தில் வழங்கப்படும் $10 மில்லியன் கடன் தொகை 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை நீடிக்கப்படும். இது நிறுவனங்கள் உலகமயமாதலுக்கும் விநியோகச் சங்கிலித் தொடர் இடையூறுகளைத் தவிர்க்கவும் உதவும் என்று கூறினார் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்.
மூன்றாவதாக, உள்ளூர் கட்டுமானத் திட்ட கடன் உதவித் தொகையான $15 மில்லியன் கடன் 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை நீடிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெளிவுபடுத்தினார்.

