குறைந்த வருமான ஊழியர்களுக்கு அதிக வேலைநலன் வழங்கீடுகள்

குறைந்த வருமான ஊழியர்களுக்கு அதிக வேலைநலன் வழங்கீடுகள்

2 mins read
c0f80897-718d-4e7a-af99-c36fcd0e7112
குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளத்தைக் கூட்டும் முதலாளிகளுக்கும் உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு விரைவில் அதிகமான வேலைநலன் வழங்கீடுகள் கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது அந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளத்தைக் கூட்டும் முதலாளிகளுக்கும் உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறைந்த வருமானம் ஈட்டும் மூத்த ஊழியர்களுக்கான அதிகபட்ச ஆண்டு வழங்கீடு 4,900 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அது 4,200 வெள்ளியாக இருந்தது.

வழங்கீடுகள் ஊழியரின் வயது, சம்பளம் ஆகியவற்றை பொறுத்து வழங்கப்படும். மூத்த ஊழியர்களும், உடற்குறையுள்ள ஊழியர்களும் தொடர்ந்து அதிகபட்ச வழங்கீடுகளைப் பெறுவார்கள்.

2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த மேம்பாடுகள் நடப்புக்கு வரும் என்றும் இதனால் கிட்டத்தட்ட அரை மில்லியன் சிங்கப்பூரர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வேலை நலன் திட்டம் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அதேவேளையில் அவர்களின் மத்திய சேம நிதியில் சேமிப்புகளை உயர்த்தி தொடர்ந்து வேலை செய்ய ஊக்குவிக்கும் நோக்கத்திலும் உருவாக்கப்பட்டது. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வைக் குறைக்கவும் முன்னேறவும் இவை உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

“ பல வளர்ந்த நாடுகளில் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது, அது மெதுவாக சமூக ஒற்றுமையை உடைத்து மக்களைப் பிரிக்கிறது. அதேபோன்ற தாக்கம் சிங்கப்பூரிலும் வரலாம். இதை தவிர்க்க தொடர்ந்து பொருளியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒருவருக்கொருவர் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று துணைப் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்பட்ஜெட் 2024