பட்ஜெட் 2024: திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு வர்த்தகங்கள் வரவேற்பு

பட்ஜெட் 2024: திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு வர்த்தகங்கள் வரவேற்பு

2 mins read
c1188d79-fdae-4e05-85a1-d3059584ff07
40 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய சிங்கப்பூரர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள அவர்களது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கில் $4,000 வரவு வைக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நடவடிக்கைகளை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சில வர்த்தகங்கள் வரவேற்று உள்ளன.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருந்தன.

நடுத்தர வயதுடைய சிங்கப்பூர்களின் நலனைக் குறிக்கோளாகக் கொண்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நடவடிக்கைகளும் அவற்றுள் அடங்கும்.

அந்த வயதுடையோர் தங்களது வாழ்க்கைத் தொழிலுக்கு இடையே மறுபடியும் கற்றுக்கொண்டு திறனை வளர்த்து, வேலையில் முன்னேற புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அந்த அறிவிப்புகளின் பலனை சில நிறுவனங்கள் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டன. ஊழியர்களுக்கு மறுதிறன் அளிக்கவும் தொழில்நுட்பத் திறன் வட்டாரத்தை விரிவாக்க புதிய ஊழியர்களை நியமிக்கவும் அந்த அறிவிப்புகள் கைகொடுக்கும் என்று அவை நம்புகின்றன

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த ஆர்வமாக உள்ள நிறுவனங்கள் புதிய அறிவிப்பை பெரிதாக வரவேற்றுள்ளன.

அதேநேரம், உற்பத்தி போன்ற பாரம்பரிய தொழில்துறைகளுக்கு ஏற்ற திட்டங்களும் புதிய அறிவிப்பில் இடம்பெற்று இருப்பதாக மேலும் சில நிறுவனங்கள் கருதுகின்றன.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்தார்.

40 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய சிங்கப்பூரர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள அவர்களது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கில் $4,000 வரவு வைக்கப்படும்.

மே மாதம் வரவு வைக்கப்படும் அந்தத் தொகையை, தங்களது வேலைத் திறனை மேம்படுத்தும் சில பயிற்சிப் பாடங்களுக்கு அத்தகையோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்