2023ஆம் ஆண்டு 46,500 மோசடிச் சம்பவங்கள்

2023ஆம் ஆண்டு 46,500 மோசடிச் சம்பவங்கள்

2 mins read
09892af9-34ae-47b2-8c1d-06dbb4456986
2019ஆம் ஆண்டு முதல் இதுவரை மோசடிச் சம்பவங்களில் மட்டும் $2.3 பில்லியனுக்கும் அதிகமான தொகை பறிபோய்விட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடிகள் பெருகுவது பற்றி அரசாங்க அமைப்புகளும் ஊடகங்களும் ஏராளமான எச்சரிக்கைகளை வெளியிட்ட போதிலும் 2023ஆம் ஆண்டு மோசடிச் சம்பவங்கள் சாதனை அளவாக அதிகரித்தன.

கடந்த ஆண்டில் பதிவான மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 46,563. அவற்றில் சிக்கியோர் $651.8 மில்லியன் பணத்தை இழந்தனர். இழந்த தொகை 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் சிறிது குறைவு.

அந்த ஆண்டில் மோசடிக்குப் பலியானோர் $660.70 மில்லியனைப் பறிகொடுத்தனர்.

இருப்பினும், ஆகப் பிரபலமான 10 மோசடி வகைகளில் கடந்த ஆண்டு இழந்த தொகை அதற்கு முந்திய ஆண்டை மிஞ்சியது.

அந்த 10 வகை மோசடிகளில் 2022ஆம் ஆண்டு $509.2 மில்லியன் இழப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அந்தத் தொகை $573.90க்கு அதிகரித்தது.

காவல்துறை இங்கு நடந்துள்ள மோசடிச் சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 18) வெளியிட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதுவரை மோசடிச் சம்பவங்களில் மட்டும் $2.3 பில்லியனுக்கும் அதிகமான தொகை ஏமாற்றப்பட்டுள்ளது அதன்மூலம் தெரிய வந்துள்ளது.

‘மேல்வேர் ஸ்கேம்’ எனப்படும் கணினி ஊடுருவல் மோசடி பற்றி முன்பு அவ்வளவாகக் கேள்விப்பட்டிருக்க முடியாது.

ஆனால், கடந்த ஆண்டு அந்த மோசடி பரவலாக அதிகரித்தது. அந்த ஒரு வகை மோசடி தொடர்பாக 1,899 சம்பவங்கள் பதிவாயின. அவற்றில் சிக்கியோர் $34.1 மில்லியனை இழந்தனர்.

கடந்த ஆண்டு மிகவும் அதிகமாக நடைபெற்றது வேலை தொடர்பான மோசடிதான்.

கடந்த ஆண்டு 9,914 வேலை மோசடிச் சம்பவங்கள் பதிவாயின. அவற்றில் சிக்கியோர் குறைந்தபட்சம் $135.70 மில்லியனை பறிகொடுத்தனர்.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற வேலை மோசடிகளில் $117.40 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

வேலை மோசடிகளில் சிக்கியோரில் 45 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் 30க்கும் 49க்கும் இடைப்பட்ட வயதினர்.

அத்தகையோரை, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் வாயிலாக மோசடிக்காரர்கள் அடிக்கடி தொடர்புகொள்வார்கள்.

வீட்டிலிருந்தவாறே இணையம் மூலம் வேலை செய்யலாம் என அவர்கள் ஆசைவார்த்தை காட்டுவார்கள்.

செய்த வேலைக்கான தொகையைப் பெறுவதற்கு முன்னர், மோசடிக்காரர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புமாறு மோசடியில் சிக்கியோர் கேட்டுக்கொள்ளப்படுவர்.

பணத்தை அனுப்பியும், வேலை செய்ததற்கான தொகை வரவில்லை என்பதை அறிந்த பின்னரே, தாங்கள் மோசடியில் சிக்கியதை பொதுமக்கள் உணர்வார்கள் என்று காவல்துறை விளக்கியது. பணம் பறித்தவர்களை, அதன் பின்னர் தொடர்புகொள்ளவும் முடியாது என்றது காவல்துறை.

குறிப்புச் சொற்கள்