தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ஆகாயத் துறை பயிற்சி நிலையத்துக்கு $120மி. மேம்பாடு

2 mins read
90c3a88d-f0b0-44c2-929c-76140e4efecd
சிங்கப்பூர் சிவில் ஆகாயத் துறை ஆணையத்தின் ஒரு பிரிவான ஆகாயத் துறை பயிற்சி நிலையம். - படம்: சிங்கப்பூர் சிவில்

சிங்கப்பூரில் ஆகாயத் துறையின் உள்ளூர், வெளிநாட்டு மனிதவள தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக சிவில் ஆகாயத் துறை ஆணையத்தின் ஒரு பிரிவான சிங்கப்பூர் ஆகாயத் துறை பயிற்சி நிலையம் $120 மில்லியன் செலவில் மேம்பாடு காண உள்ளது.

இந்த மேம்பாட்டுப் பணிகள் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளன. இது 2026ஆம் ஆண்டு முடிவுறும் போது ஆகாயத் துறை பயிற்சி நிலையத்தின் பயிற்சி அளிக்கக்கூடிய திறன் 20 விழுக்காடு அதிகரிக்கும் என்று ஆகாயத் துறை ஆணையம் கூறியது.

இந்த மேம்பாடு புதிய சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையத்துக்கு துணைபுரியும் வகையில் ஆணையத்தின் மனிதவள திறன் மேம்பாடு காணும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் 2030ஆம் ஆண்டுகளில் 50 மில்லியன் பயணிகளுக்கு சேவை வழங்கும் திறனைப் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த மேம்பாட்டுப் பணிகளின் மூலம் கட்டடத்தின் முன்பகுதியில் நான்காவது மாடித் தளம் ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது ஆணையத்தின் பயிற்சி நிலைய மொத்த பரப்பளவை 2,946 சதுர மீட்டரிலிருந்து 3,567 சதுர மீட்டர் அளவுக்கு கெண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.

இந்த மேம்பாட்டுப் பணிகள் முடிவுற்றபின், பயிற்சி நிலையத்தில் முதன் முதலாக பொதுமக்கள் பார்வைக்கென புதிய பகுதி, மேல்மாடித் தளம், உணவகம் ஆகியவற்றுடன் பொது நிகழ்ச்சிகள் நடத்த கூடம் போன்றவை இருக்கும்.

ஆணையத்தின் மேம்பட்ட கட்டடத்தில் பொதுமக்கள் பார்வைக்காக ஆகாயக் காட்சிக் கூடம் ஒன்றும் இருக்கும். இங்கு வரும் பார்வையாளர்கள் அறிந்துகொள்ள நாட்டின் ஆகாயத் துறை வரலாறு, எதிர்காலத் திட்டங்கள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும் என்று ஆணையம் தெளிவுபடுத்தியது.

குறிப்புச் சொற்கள்