மெக்பர்சனில் விபத்து; குழந்தை உட்பட ஐவர் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
07c7faf2-cc7b-406c-963e-34dab363321f
மெக்பர்சன் ரோட்டுக்கும் அல்ஜுனிட் ரோட்டுக்கும் இடையே இருக்கும் சந்திப்பில் இந்த விபத்து நடந்தது. - படம்: ஷின்மின் நாளிதழ்

மெக்பர்சன் ரோட்டுக்கும் அல்ஜுனிட் ரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள சந்திப்பில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளாயின.

இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை நடந்தது என்றும் விபத்துக் குறித்துத் தங்களுக்கு அன்று பிற்பகல் 3.10 மணிக்குத் தகவல் கிடைத்தது என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இவ்விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட ஐவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான நீல நிற காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்திருந்ததாகவும் காரின் முன்பகுதியில் அமைந்திருந்த சில பாகங்கள் உடைந்து சாலையில் சிதறிக் கிடந்ததாகவும் ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது.

மற்றொரு கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்சாரப் பெட்டியை இடித்துத் தள்ளி நின்றது என்றும் அந்நாளிதழ் கூறியது.

29 வயது கார் ஓட்டுநரும் காரில் பயணம் செய்த நான்கு பயணிகளும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் ஒரு வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் என்றும் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது சுயநினைவோடு தான் இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மூவர் கே கே மகளிர் சிறார் மருத்துவமனைக்கும் இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்