தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேலும் 5 குடியிருப்புப் பகுதிகளில் ‘வொல்பாக்கியா’ திட்டம்

2 mins read
71ce5c34-3d89-4698-b684-ec8d1912727f
கிளமெண்டி வட்டாரத்தில் ‘வொல்பாக்கியா’ கொசுக்களைப் பறக்கவிடும் தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் விதமாகவும் டெங்கிப் பரவலை முறியடிக்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்ட ‘வொல்பாக்கியா’ திட்டம் மேலும் ஐந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.

இவ்வாரம் முதல் புக்கிட் மேரா - தெலுக் பிளாங்கா, கிளமெண்டி - வெஸ்ட் கோஸ்ட், காமன்வெல்த், ஹாலந்து, மரின் பரேட் - மவுண்ட்பேட்டன் ஆகிய பகுதிகள் இந்த திட்டத்தித்தின்கீழ் வருகின்றன.

இந்த ஐந்து குடியிருப்புப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்களும் டெங்கி ஆபத்தும் அதிகமாக இருப்பதால் ‘வொல்பாக்கியா’ திட்டத்தில் இணைக்கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.

‘வொல்பாக்கியா’ திட்டத்தின்கீழ் நோயைப் பரப்பக்கூடிய கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்பட்ட ஆண் கொசுக்கள் வெளியே விடப்படுகின்றன.

இதன்மூலம் இவ்வாண்டின் முதல் காலாண்டுக்குள் சிங்கப்பூரில் 480,000 குடும்பங்கள், அதாவது சிங்கப்பூரில் உள்ள 35 விழுக்காடு குடும்பங்கள் ‘வொல்பாக்கியா’ திட்டத்தின்கீழ் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே ஈசூன், இயூ டீ உள்ளிட்ட 13 பகுதிகளில் ‘வொல்பாக்கியா’ திட்டம் செயல்பட்டு வருகிறது.

ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்பட்ட ஆண் கொசுக்கள் ‘வொல்பாக்கியா’ கிருமியை ஏந்திச் செல்லும். அவை குடியிருப்புப் பகுதிகளில் விடப்படும்போது பெண் கொசுக்களிடம் இணைந்து இனப்பெருக்க நடவடிக்கையில் ஈடுபடும். இதனால் பெண் கொசுக்கள் கருவுற்றாலும் அதன் முட்டைகளால் குஞ்சு பொரிக்க முடியாது.

பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மட்டும் சிங்கப்பூரில் 515 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர். அதையடுத்து, திட்டம் விரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டில் இதுவரை மட்டும் 2,600க்கும் அதிகமான டெங்கி பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்