பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் இசைநிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் நடைபெற இருக்கின்றன.
இந்த இசைநிகழ்ச்சிகள் சிங்கப்பூரின் பொருளியலுக்குப் பேரளவில் பலன் அளிக்கக்கூடும் என்பதால் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் அவற்றுக்கு மானியம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெய்லர் சுவிஃப்ட்டின் இசைநிகழ்ச்சிகள் மூலம் விருந்தோம்பல்துறை, சில்லறை வர்த்தகம், பயணத்துறை, உணவகங்கள் ஆகியவை பலனடையும் சாத்தியம் அதிகம் இருப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சும் தெரிவித்துள்ளன.
டெய்லர் சுவிஃப்ட்டின் இசைநிகழ்ச்சிகள் நடைபெற்ற மற்ற நகரங்கள் இதுபோன்று பலனடைந்ததை அவை சுட்டின.
சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் டெய்லர் சுவிஃப்ட் இசைநிகழ்ச்சிகளைக் காண பலர் நுழைவுச்சீட்டுகளை வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை 300,000க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டினர் பலர் நுழைவுச்சீட்டுகளை வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இசைநிகழ்ச்சியைக் காண அவர்கள் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வர் என்று கழகமும் அமைச்சும் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
“தரம்வாய்ந்த உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, துரிதமான சேவைகள், பல்வேறு கலாசாரங்கள் ஆகியவற்றைக் கொண்ட நாடு சிங்கப்பூர். பிரம்மாண்டமான, அனைத்துலக நிகழ்ச்சிகளை நடத்த தேவையான அனைத்து ஆற்றல்களையும் சிங்கப்பூர் கொண்டுள்ளது. பல்வேறு வாழ்வியல், பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட நிகழ்ச்சிகள் விளையாட்டு நடுவத்தில் தொடர்ந்து மேடையேற்றப்படும்,” என்று கழகமும் அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
தென்கிழக்காசியாவில் சிங்கப்பூரைத் தவிர மற்ற நாடுகளில் சுவிஃப்ட்டின் இசைநிகழ்ச்சி நடைபெறாமல் இருக்க ஒவ்வோர் இசைநிகழ்ச்சிக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் $4 மில்லியன் வரையிலான மானியம் வழங்கியதாக இசைநிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளரான அன்ஷுட்ஸ் எண்டர்டெய்ன்மண்ட் குழுமம் தெரிவித்தது என்று பிப்ரவரி 16ஆம் தேதியன்று தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேட்டா தவிசின் கூறினார்.
திரு ஸ்ரேட்டா இவ்வாறு கூறியதாக பேங்காக் போஸ்ட் நாளிதழ் உட்பட பல்வேறு வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அண்மையில் நான்காவது முறையாக கிராமி விருது வென்ற சுவிஃப்ட், மார்ச் 2ஆம் தேதியிலிருந்து மார்ச் 9ஆம் தேதி வரை தேசிய விளையாட்டரங்கத்தில் ஆறு இசைநிகழ்ச்சிகளைப் படைக்க இருக்கிறார்.
ஆசியாவில் ஜப்பானிலும் சிங்கப்பூரிலும் மட்டும் அவரது இசைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.