இருவேறு மொத்த கொள்முதல் நிறுவனங்களைச் சேர்ந்த இரு இயக்குநர்கள் இணைந்து செயல்பட்டு டிபிஎஸ் வங்கிக்கு பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் இரு நிறுவனங்களில் ஒன்றிற்கு $500,000 கடன் வழங்கும்படிச் செய்தனர்.
அந்தக் கடனை அவர்கள் இல்லாத வர்த்தக பரிவர்த்தனைகளை இருப்பதுபோல் காட்டி பெற்றது தெரியவந்தது.
இதற்காக புதன்கிழமையன்று (பிப்ரவரி 21) பாங் சியு ஷென் என்ற டிங்க்ஸ் நிறுவன இயக்குநருக்கு ஈராண்டு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது கூட்டாளியான அட்டிகோஸ் நிறுவனத்தின் 53 வயது லூ குவோ ஜியான் என்பவருக்கு ஈராண்டு இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாங், லூ இருவரும் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளனர். அவர்கள் இருவரும் $70,000 பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவ்விருவரையும் மாவட்ட நீதிபதி சே யுவென் ஃபாட் மூன்று ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளில் வழக்கு விசாரணைக்குப் பின் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கின் இறுதி வாதத்தில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் டேவிட் கோ, அவர்கள் பெற்ற கடன் அடைக்கப்பட்டாலும் அவர்களின் ஏமாற்று வேலை வங்கிக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தை தோற்றுவித்ததாகக் கூறினார்.
“இதுபோல், நிதி நிறுவனங்களுக்கோ, நிதிக் கட்டமைப்புக்கோ ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகள் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் சொந்தத் தேவைக்காகக் கடன் பெறுவோரைத் தடுப்பது முக்கியம்,” என அரசு வழக்கறிஞர் கூறினார்.

