யூசூ என்ற சமூக ஊடக நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியின் அக்கறையில்லாத போக்கால் அதன் வருமானம் பல மில்லியன் வெள்ளி அளவு மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு இது நிகழ்ந்தாகக் கூறப்படும் நிலையில் இதன் தொடர்பில் ஜேம்ஸ் மேத்யூ சோமசுந்தரம், வயது 59, என்ற அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 21) அன்று நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த நிறுவனத்தின் உண்மை நிலவரத்தை திரித்துக் காட்டி அந்நிறுவனத்தின் பங்குகளை மற்றவர்கள் வாங்கத் தூண்டும் வகையில் அதன் பதிவுப் பத்திரங்கள் இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஜேம்ஸ் மேத்யூ சோமசுந்தரத்தின் அக்கறையின்மையால் இந்தக் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
பங்குப்பத்திர பதிவுச் சட்டத்தின்கீழ் நிறுவனம் ஒன்று புரியும் குற்றம் அதன் அதிகாரி ஒருவரின் அக்கறையின்மையால் நிகழுமானால் அந்த அதிகாரி குற்றம் புரிந்ததாக கருதப்படுவார்.
தற்பொழுது யூசூ நெட்வொர்க்ஸ் குருப் என்ற பெயரில் இயங்கும் யூசூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 2016ஆம் ஆண்டு நவம்பர் வரை செயல்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நவம்பரில் அவர் உடல்நலக் காரணங்களால் பதவி விலகினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, யூசூவின் முன்னாள் தலைவரான தாமஸ் ஸிலிக்காஸ் மீது புதன்கிழமை (பிப்ரவரி 21) அன்று சிங்கப்பூர் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது குறித்து இன்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல்துறை சிவப்பு நிற நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
இவருக்கு எதிரான பிடிவாரண்ட் யூசூ வெளியிட்ட திரித்துக் கூறும் அறிக்கைகள் தொடர்பானது என்று கூறப்படுகிறது.

