இணையத்தில் பொருள் வாங்குவதுபோல நடித்து மோசடி: விசாரணையில் 40 பேர்

இணையத்தில் பொருள் வாங்குவதுபோல நடித்து மோசடி: விசாரணையில் 40 பேர்

சித்திரிப்புப் படம்: இணையம்

21 Feb 2024 - 9:58 pm

1 mins read

கேரசல் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் பொருள் வாங்குவதுவது போல போலியாகச் செயல்பட்டு மோசடி நிகழ்ந்திருப்பது தெரிய வந்து உள்ளது. இது தொடர்பாக 17 வயதுக்கும் 68 வயதுக்கும் இடைப்பட்ட ஏறக்குறைய 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய மோசடியில் இவ்வாண்டு தொடக்கம் முதல் 419 பேர் சிக்கியதாகவும் அவர்கள் குறைந்தபட்சம் $1.8 மில்லியன் பணத்தை இழந்துவிட்டதாகவும் காவல்துறை புதன்கிழமை (பிப்ரவரி 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மோசடிகளில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க பிரப்வரி 13 முதல் பிப்ரவரி 19 வரை தேடுதல் வேட்டை நடைபெற்றது.

வர்த்தக விவகாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் ஏழு காவல்துறைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சோதனை நடத்தி 38 பேரைப் பிடித்தனர். பிடிபட்டவர்களில் ஒன்பது பெண்களும் அடங்குவர்.

கேரசல், ஃபேஸ்புக் ஆகியவற்றில் விற்பனைக்கு விடப்பட்ட பொருள்களை வாங்க விரும்புவதுபோல பாசாங்கு செய்து அவற்றை விளம்பரப்படுத்தியவர்களை மோசடிக்காரர்கள் தொடர்புகொள்வர்.

அந்தப் பொருளுக்குப் பணம் அனுப்பியதாக ஓர் இணைப்பை அவர்கள் அனுப்புவர். அதனைச் சொடுக்கியதும் போலி இணையத்தளத்திற்கு அது இட்டுச் செல்லும். அதனைத் தொடர்ந்து, பொருளை விற்பனைக்கு விட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும்.

குறிப்புச் சொற்கள்